இந்தியாவில் அதிக மரங்களை நட்ட மனிதர் சத்குரு தான் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழாராம்

isha news

இந்தியாவில் அதிக மரங்களை நட்ட மனிதர் நம் சத்குரு தான் என்று கோவையில் நடந்த பாராட்டு விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சத்குருவுக்கு புகழாராம் சூட்டினார்.

காவேரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்காக களமிறங்கியுள்ள சத்குருவுக்கு கோவையின் முக்கிய பிரமுகர்கள் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி கொடிசியா அரங்கத்தில் இன்று மாலை நடைபெற்றது. இவ்விழாவை இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை, கொடிசியா, சிபாகா, கிரெடாய், கோவை குளங்கள் பாதுகாப்பு இயக்கம், சிறுவாணி விழுதுகள், கவுசிகா நதி பாதுகாப்பு இயக்கம், வனம் அறக்கட்டளை, ராக் உட்பட 35-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் அமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் இயக்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்து இருந்தன.

இவ்விழாவில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் விழாவில் பேசியதாவது:

இந்தியாவில் அதிக மரங்களை நட்ட மனிதர் நம் சத்குரு தான். அவர் தொடங்கியுள்ள காவேரி கூக்குரல் இயக்கத்தால் காவேரி நதி புத்துயிர் பெறும். விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும். அவருடைய ஈஷா யோகா மையம் கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு சுற்றுச்சூழல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை மூன்றரை கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் மட்டுமின்றி, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப் பணிகளை ஈஷா செய்து வருவதை நான் நேரில் பார்த்து வருகிறேன். சத்குரு நம் மாவட்டத்தில் இருப்பது நமக்கு பெருமை. நம் மாநிலத்துக்கு பெருமை. காவேரி கூக்குரல் இயக்கத்துக்கு தேவைப்படும் மரங்களை உள்ளாட்சி துறை வழங்க தயாராக உள்ளோம். அவருடைய பணிகளுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

விழாவுக்கு தலைமை தாங்கிய பாரதிய வித்யா பவன் தலைவர் திரு.கிருஷ்ணராஜ் வாணவாராயர் பேசியதாவது:

காவேரி விஷயத்தில் பிரச்சினை என்ன என்று எல்லாருக்கும் தெரியும். அதற்கு தீர்வு என்ன என்றும் எல்லாருக்கும் தெரியும். ஆனால், அதை சாத்தியப்படுத்த ஒரு சிலரால் மட்டுமே முடியும். அந்த ஒரு சிலரில் சத்குருவும் ஒருவர். விஞ்ஞானிகள், பொருளாதார மேதைகள், அரசியல் தலைவர்கள் போன்றோரால் எல்லாவற்றையும் சாத்தியப்படுத்திவிட முடியாது.

சத்குரு அவர்கள் காவேரி கூக்குரல் இயக்கத்தை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றி காட்டியிருக்கிறார். அனைத்து அரசியல் கட்சிகள், ஏழை, பணக்காரர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் சத்குரு ஒன்றிணைத்து உள்ளார். அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்வது நம் அதிர்ஷ்டம்.

இவ்வாறு திரு.கிருஷ்ணராஜ் வாணவாராயர் பேசினார்.

விழாவில் சத்குரு பேசுகையில், ”12 ஆயிரம் வருடங்களாக விவசாயம் செய்து வரும் வரலாறு நம் தென்னிந்தியாவுக்கு உள்ளது. தமிழ் கலாச்சாரம் விவசாயிகளால் வளர்ந்த கலாச்சாரம். அரசர்களாலோ, மேதைகளாலோ இந்த கலாச்சாரம் வளரவில்லை. ஆனால், இப்போது, வெறும் 2 சதவீதம் விவசாயிகள் மட்டும் தங்களின் குழந்தைகள் விவசாயம் செய்வதை விரும்புகின்றனர். இந்நிலை இப்படியே தொடர்ந்தால் இவ்வளவு பெரிய மக்கள் தொகைக்கு யார் உணவு அளிப்பார்கள்? விவசாயத்தை லாபகரமானதாக மாற்றாவிட்டால் யாரும் அதில் ஈடுபட விரும்பமாட்டார்கள்” என்றார்.

பின்னர், செய்தியாளர்களிடம் சத்குரு பேசுகையில், ”காவேரி கூக்குரல் இயக்க பயணத்தின் கர்நாடகாவிலும் தமிழகத்திலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நான் சென்ற இடங்களில் எல்லாம் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி வரவேற்றனர். இரவு நேரங்களிலும் கூட மக்கள் தங்கள் குழந்தைகளுடன் எனக்காக சாலை ஓரங்களில் காத்து இருந்தனர்.

கர்நாடகாவிலும் தமிழ்நாட்டிலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஊடகங்கள் சிறப்பான ஆதரவை அளித்தன. அவர்களுக்கு எனது நன்றி. அதேபோல், மிகுந்த ஈடுபாட்டுடன் பங்காற்றிய காவல்துறையினருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அடுத்த கட்டமாக, காவேரி கூக்குரல் இயக்கத்துக்காக கர்நாடகா முதல்வர் மற்றும் அமைச்சர்களை நாளை சந்தித்து பேச உள்ளேன். ஒவ்வொரு தாலுகாவிலும் 250 முதல் 500 விவசாயிகளை வேளாண் காடு முறைக்கு மாற்ற வேண்டும் என்று விரும்புகிறோம்” என்றார்.

கிருஷ்ண ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு.கிருஷ்ணன், கங்கா மருத்துவனையின் இயக்குநர் திரு.ராஜசேகர் ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்தனர்.

சாண்ட்ஃபிட்ஸ் பவுண்டரிஸ் தலைவர் திரு.ஏ.வி.வரதராஜன், கொங்கு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் திரு.ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய தொழில் வர்த்தக சபையின் கோவை மாவட்ட தலைவர் திரு.லட்சுமிநாராயணசாமி, கொடிசியா தலைவர் திரு.இரா.ராமமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சிக்கு முன்னதாக, லி மெரிடியன் ஹோட்டலில் இருந்து கொடிசியா வரை மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் சத்குருவுடன் ஏராளமான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் பங்கேற்றனர்.

தென்னிந்தியாவின் உயிர்நாடியான காவேரி நதிக்கு புத்துயிரூட்டவும், அதை சார்ந்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் காவேரி கூக்குரல் என்ற இயக்கத்தை சத்குரு தொடங்கியுள்ளார். இவ்வியக்கத்தில் மாநில அரசுகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக தலகாவேரி முதல் திருவாரூர் வழியாக சென்னை வரை சத்குரு தோராயமாக 3,500 கி.மீ மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். இப்பேரணி கடந்த 3-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வர்கள், தமிழ்நாடு ஆளுநர், புதுச்சேரி துணை நிலை ஆளுநர், தமிழக துணை முதல்வர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. சத்குரு சென்ற இடங்களில் எல்லாம் விவசாயிகள், கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என ஆயிரக்கணக்கானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு கோவை திரும்பிய சத்குருவுக்கு கோவையின் முக்கிய பிரமுகர்கள் நன்றி கூறும் விதமாக இவ்விழாவை ஏற்பாடு செய்தனர்.

 

0 Comments

Leave a Comment

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password

Translate »