ஈஷா நவராத்திரி விழாவின் 8-ஆம் நாள் கொண்டாட்டம் – பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய பொம்மலாட்டம்

isha news

கோவை

நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தில் தமிழர்களின் தொன்மையான கலைகளுள் ஒன்றான பொம்மலாட்டம் நேற்று (அக்.06) சிறப்பாக நடைபெற்றது.

ஈஷாவில் நவராத்திரி திருவிழா ஆண்டுதோறும் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு நவராத்திரி விழா செப்.29-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. அன்று முதல் தினமும் பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், நந்தி முன்பு நடக்கும் மஹா ஆரத்தி உட்பட பல்வேறு சிறப்பம்சங்களுடன் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நவராத்திரியின் 8-ம் நாளன்று (ஞாயிற்று கிழமை) தமிழர்களின் தொன்மையான கலைகளுள் ஒன்றான பொம்மலாட்டம் நடைபெற்றது.

காரைக்காலைச் சேர்ந்த திரு.கே.கேசவசாமியின் ‘காரை ராமன் கிரியேசன்ஸ்’ குழுவினர் இந்த பொம்மலாட்ட நிகழ்ச்சியை நிகழ்த்தினர். அவர்கள் ஆதிசங்கரரின் வாழ்க்கை நிகழ்வுகளை பொம்மலாட்ட வடிவில் வழங்கினர்.

பல வண்ண பொம்மைகளின் மூலம் காட்சிகளை பார்த்தது பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. மேலும் அதன் மூலம் வெளிபடுத்தபட்ட ஆதிசங்கரரின் வாழ்க்கை நிகழ்வுகள் ஞானத்தின் ஆற்றலையும் பார்வையாளர்களுக்கு உணர்த்தியது. இது போன்ற கலைகள் இன்னமும் உயிர்போடு இருப்பதை பார்த்த பார்வையாளர்கள் பெரு வியப்பில் ஆழ்ந்து போயினர்.

நிகழ்ச்சிக்கு பின் திரு. கேசவசாமி பேசியதாவது.

ஈஷா யோக மையம் போன்ற ஒரு அமைதியான சூழலில் பொம்மலாட்ட கலையை நிகழ்த்தியது மனதிற்கு நிறைவாக உள்ளது. ஈஷா யோக மையம் சார்ந்தவர்கள் மட்டுமில்லாமல் ஏராளமான பொது மக்களும் பொம்மலாட்டத்தை கண்டுகளித்தனர்.

நிகழ்ச்சி தொடங்கியது முதல் இறுதி வரையிலும், ஒவ்வொரு காட்சிகளுக்கும் அவர்கள் கை தட்டி, சிரித்து, ரசித்ததை பார்த்த போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் ஒன்றிப்போய் பொம்மைகளை ஒரு கதாபாத்திரமாகவே உள்வாங்கி பார்த்தனர்.

அழிந்து வரும் கலைகளில் ஒன்றாக பொம்மலாட்டம் இருக்கிறது. இந்நிலையில் ஈஷா யோக மையம் எங்களை போன்ற கலைஞர்களுக்கு வாய்ப்பளிப்பதும், இது போன்ற கலைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதும் கலைஞர்களாகிய எங்களுக்கு எல்லாம் ஊக்கமளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கேசவசாமி கடந்த 30 ஆண்டுகளாக பொம்மலாட்ட கலையை நிகழ்த்தி வருகிறார். இதுவரை சுமார் 490 கதைகளை உருவாக்கி அதை பொம்மலாட்டமாக அரங்கேற்றி சாதனை படைத்துள்ளார். இதற்கு தேவையான பொம்மைகளையும் அவரே தயாரிக்கவும் செய்கிறார். இவரின் கலை சேவையை பாராட்டி சங்கீத நாடக அகாடமி விருது, கலைமாமணி, கலாபாரதி, கலைசித்தர், கலைசுந்தர், கம்பன் கலை சுடர், இசை புரவலர் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

மேலும், இரவு 8 மணியளவில் ஆதியோகியில் 3 டி ஒளி, ஒலி காட்சியுடன் கூடிய ஆதியோகி திவ்ய தரிசன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதற்கு முந்தைய நாட்களில் திருமதி.சோனாலிகா புரோஹித் மற்றும் அவர்களுடைய மகள் செல்வி.ஸ்ரீனிகா புரோஹித்தின் ஒடிசி நடனம், பெருந்துறை கே.கே.சி சலங்கை ஆட்டக் குழுவினரின் சலங்கை ஆட்டம், பரதநாட்டிய கலைஞர் திருமதி.தக்ஷினா வைத்தியநாதன் அவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி, கர்நாடக வாய்ப்பட்டு கலைஞர் திரு.விக்னேஷ் சங்கரநாராயணனின் கர்நாடக சங்கீத நிகழ்ச்சி, ஈஷா சம்ஸ்க்ரிதி மாணவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி மற்றும் செல்வி. வர்ஷா புவனேஸ்வரியின் கதாகாலட்சேபமும் நடந்தது.

 

0 Comments

Leave a Comment

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password

Translate »