ஒரு கொலையும், அது தொடர்பான விசாரணையும்: படம் “கொலைகாரன்” சினிமா விமர்சனம்

201907062019487988_The-cinema-Kolaikaaran-in-review_SECVPF.gif

அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடம் கட்டப்படும் இடத்தில், ஒரு ஆண் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறான். அவனுடைய உடல் தீவைத்து எரிக்கப்பட்டு இருக்கிறது. கொலையாளி சில தடயங்களை விட்டு செல்கிறான்.

போலீஸ் அதிகாரி அர்ஜுனும், அவரது சகாக்களும் விரைந்து வந்து விசாரணை நடத்துகிறார்கள். கொலை செய்யப்பட்டவன் கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அடையாளம் தெரியவருகிறது. அவனுடைய சட்டை காலரில் இருந்த டெய்லர் முகவரியை வைத்து, அவன் ஆந்திராவை சேர்ந்தவன் என்பதை கண்டுபிடிக்கிறார்கள்.

இந்த கொலை தொடர்பாக ஆஷிமா மீதும், அவருடைய எதிர் வீட்டில் வசிக்கும் விஜய் ஆண்டனி மீதும் போலீஸ் அதிகாரி அர்ஜுன் சந்தேகப்படுகிறார். இருவரும் கொலையில் தொடர்புடையவர்கள் என்பதற்கான முகாந்திரம் கிடைக்காததால், குற்றவாளியை அணுக முடியாமல் அர்ஜுன் திகைக்கிறார். அவருடைய உயர் அதிகாரியான நாசரிடம், அந்த கொலை வழக்கில் உதவும்படி கேட்கிறார். நாசரும் உதவுகிறார். அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்புடன் இடைவேளை வருகிறது.

கொலையாளி யார், கொலை செய்யப்பட்டவர் யார், இருவருக்கும் என்ன தொடர்பு? என்பது இடைவேளைக்கு பின் வரும் கதை.

விஜய் ஆண்டனி இரண்டு விதமான தோற்றங்களில் வருகிறார். ஆஷிமாவின் காதலர், உயர் போலீஸ் அதிகாரி ஆகிய இரண்டு விதமான தோற்றங்களிலும் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கிறார். அவருக்கும், ஆஷிமாவுக்கும் என்ன தொடர்பு? என்பது எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் ‘சஸ்பென்ஸ்.’ இருவருக்குமான டூயட் காட்சிகள், ‘வேஸ்ட்.’ சண்டை காட்சிகளில் விஜய் ஆண்டனியின் சாகசங்கள், சவாலாக அமைந்துள்ளன.

அர்ஜுனுக்கு போலீஸ் கதாபாத்திரம் புதுசு அல்ல. போலீஸ் அதிகாரி கார்த்திகேயன் கதாபாத்திரத்தில், எவ்வளவு வித்தியாசம் காட்ட முடியுமோ அவ்வளவு வித்தியாசம் காட்டியிருக்கிறார். அவருடைய திடமான உடற்கட்டும், உறுதியான விசாரணை முறைகளும் காட்சிகளை தூக்கி நிறுத்த உதவுகின்றன. கார்த்திகேயன் என்ற போலீஸ் கதாபாத்திரத்துக்கு அர்ஜுன் கம்பீரம் சேர்த்து இருக்கிறார்.

ஆஷிமா போதுமான அளவுக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கிறார். காதல் காட்சிகளை விட, கொலைகாரனை பார்த்து மிரளும் காட்சிகளில், படம் பார்ப்பவர்களையும் மிரள வைத்து இருக்கிறார். ரொம்ப நாளைக்கு அப்புறம் சீதா. ஆஷிமாவின் அம்மாவாக கொலைகாரனை பார்த்து பயப்படும் காட்சிகளில், தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பகவதி பெருமாள், துணை போலீஸ் அதிகாரியாக-கூட்டத்தில் ஒருவர். சம்பத்ராம், வில்லன் கும்பலில் ஒருவர்.

முகேஷின் கேமரா, காட்சிகளின் தன்மைக்கு ஏற்ப ஓடி ஓடி உழைத்து இருக்கிறது. பின்னணி இசை மூலம் கதையோட்டத்துக்கு வேகம் கூட்டியிருக்கிறார், இசையமைப்பாளர் சைமன் கே.கிங். கதையும், காட்சிகளும் ஏற்கனவே பல படங்களில் பார்த்தவைதான் என்றாலும், கதை சொன்ன விதத்தில், படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை இருக்கையில் நிமிர்ந்து உட்கார வைத்து விடுகிறார், டைரக்டர் ஆண்ட்ரூ லூயிஸ்.

 

0 Comments

Leave a Comment

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password

Translate »