சத்குருவின் பணிகளுக்கு தமிழக அரசு துணை நிற்கும் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

isha news

சத்குருவின் பணிகளுக்கு தமிழக அரசு துணை நிற்கும் என்று சென்னையில் இன்று நடந்த காவேரி கூக்குரல் இயக்க விழாவில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

தென்னிந்தியாவின் உயிர்நாடியான காவேரி நதிக்கு புத்துயிரூட்டவும், மண் வளத்தை அதிகரித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் காவேரி கூக்குரல் என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தொடங்கியுள்ளார். இவ்வியக்கத்தில் மாநில அரசுகள், விவசாயிகள் மற்றும் மக்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக தலகாவேரியில் கடந்த 3-ம் தேதி மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கினார்.

அவர் மைசூர், பெங்களூரு, ஓசூர், தர்மபுரி, ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுச்சேரி உள்ளிட்ட நகரங்களின் வழியாக இன்று சென்னை வந்தார். இந்தப் பயணத்தின் ஒருபகுதியாக சென்னை பல்கலைக்கழகத்தில் ஒரு பொது நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தமிழக ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் திரு.பழனிசாமி, துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம், அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் திரு.பிரதாப் ரெட்டி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு.ஜி.கே.வாசன், திரைப்பட நடிகை திருமதி.சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் சத்குரு பேசியதாவது:

இப்போது காவேரி என உச்சரித்தாலே ‘ஓ காவேரி பிரச்சினையா’ என சொல்கிறார்கள். காவேரி பிரச்சினையா இல்லை? காவேரி நம் உயிருக்கு மூலமா? நம் உயிருக்கு மூலமான காவேரியை காவேரி தாய் என தானே சொல்ல வேண்டும்.

காவேரி என்பது ஒரு நதி அல்ல. 120 உப நதிகள் சேர்ந்து தான் காவேரி ஓடுகிறது. அந்த 120 நதிகளில் இப்போது வெறும் 35 நதிகள் தான் 9 முதல் 12 மாதங்கள் ஓடுகின்றன. மற்றவை எல்லாம் வறண்டுவிட்டன. காவேரி நதி 5 மாதங்கள் கடலை சென்று சேர்வதே இல்லை.

காவேரியை மீட்பது என்றால் ஒரு நதியை மீட்பது அல்ல. 85 ஆயிரம் சதுர கி.மீ பரப்பு உள்ள காவேரி படுகை முழுவதையும் மீட்க வேண்டும். கர்நாடக முதல்வரும், புதுச்சேரி முதல்வரும் மர விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர். அதேபோல், தமிழக அரசு மர விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

காவேரி நதி தோராயமாக 40 சதவீதம் வற்றிவிட்டதாக அறிவியல்பூர்வ ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால், என்னுடைய உணர்வில் 70 சதவீதம் காவேரி வற்றிவிட்டது. கடந்த 100 ஆண்டுகளில் பெய்த மழை அளவில் பெரிய எந்த மாற்றமும் இல்லை. ஆனால், மரங்கள் இல்லாமல் மண் வளமற்று போனதால் மழை நீரை பூமியில் சேமிக்க முடியவில்லை.

நாம் காவேரி நதிப்படுகையில் 242 கோடி மரங்களை நட்டு வளர்த்தால் 9 முதல் 12 டிரில்லியன் லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும். உலகில் உள்ள எல்லா ஆறுகளில் உள்ள நீரை காட்டிலும் 8 மடங்கு நீரை மண்ணில் பிடித்து வைத்துகொள்ள முடியும்.

தமிழகத்தில் 42 சதவீதம் நிலங்கள் மலடாகிவிட்டன. இந்திய கலாச்சாரம் அரசர்களாலோ, மேதைகளாலோ வளரவில்லை. இந்த கலாச்சாரம் விவசாயிகளால் வளர்ந்த கலாச்சாரம். தென்னிந்தியாவில் 12 ஆயிரம் ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்துள்ளோம். பல தலைமுறைகளாக வளமாக வைத்து கொண்டு வந்த நம் மண்ணை நாம் இரண்டே தலைமுறைகளில் வளமிழக்க செய்துவிட்டோம்.

மண்ணை வளமாக வைத்துகொள்ள மரங்களின் இலை தழைகளும், ஆடு, மாடுகளின் சாணமும் வேண்டும். மரங்களை எல்லாம் எடுத்துவிட்டோம். மாடுகள் எல்லாம் வெளிநாட்டுக்கு அனுப்பி வருகிறோம். மரங்களும் மாடுகளும் இல்லாமல் நம் மண்ணை காப்பதற்கு வேறு ஏதேனும் தொழில்நுட்பம் உங்களிடம் உள்ளதா?

நாட்டில் உள்ள 80 சதவீதம் நிலங்கள் விவசாயிகளிடம் தான் உள்ளது. விவசாயிகள் மரம் வளர்த்தால் தான் தேசத்தும் பயன் விளையும். தற்போது விவசாயம் செய்து கொண்டிருக்கும் விவசாயிகளில் வெறும் 2 சதவீதம் பேர் மட்டுமே தங்களுடைய குழந்தைகள் விவசாயத்தில் ஈடுப்படுத்த விருப்பமாக உள்ளார்கள். இந்த நிலை இப்படியே நீடித்தால் அடுத்த 25 ஆண்டுகளுக்கு பிறகு நம் தேசத்தில் விவசாயம் செய்வதற்கு ஆளே இருக்கமாட்டார்கள்.

தற்போது தமிழகத்தில் 35 ஈஷா நாற்றுப் பண்ணைகள் இருக்கின்றன. இதை அடுத்த ஓரிரு ஆண்டுகளில் 350 நாற்றுப் பண்ணைகளாக விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளோம். 242 கோடி மரங்கள் நடுவது ஒரு நாள் இரவில் நடந்துவிடாது. 12 ஆண்டுகள் வேலை செய்ய வேண்டி உள்ளது. நீங்கள் அனைவரும் அந்த 12 ஆண்டுகள் என்னுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு சத்குரு பேசினார்.

பின்னர், நிகழ்ச்சி நிறைவடையும் போது, “தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள அனைத்து விதமான ஊடகங்களும் காவேரி கூக்குரல் இயக்கத்துக்கு பேராதாரவு அளித்துள்ளன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஊடகங்கள் ஆதரவு அளித்துள்ளன. இவ்வியக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்பதில் ஊடகங்கள் முக்கிய பங்காற்றி இருக்கின்றன. அவர்களுக்கு எனது நன்றிகள். அதேபோல், தமிழ்நாடு மற்றும் கர்நாடக காவல்துறையினருக்கு எனது நன்றிகள்” என்றார்.

தமிழக ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோஹித் அவர்கள் பேசுகையில், “சிறந்த தொடக்கம் பாதி வெற்றியை தரும் என்பார்கள். அந்த வகையில் இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். (சத்குருவை பார்த்து) ஒட்டுமொத்த அரசும் உங்களுடன் இருக்கிறது. ஆகவே, உங்கள் பணி நிச்சயம் வெற்றி அடையும். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார்.

முதல்வர் பழனிசாமி பேசுகையில், “மரங்கள் மனிதர்களுக்கு வரங்கள். நதிகள் மாசுபடுவதை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக ‘நடந்தாய் வாழி காவேரி’ திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மரங்கள் நட்டு நதியை பாதுகாப்பதற்காக சத்குரு இவ்வியக்கத்தை தொடங்கியுள்ளார். இந்தியாவிலேயே அதிக மரங்களை நடும் மனிதர் சத்குரு தான். சத்குருவின் பணிகளுக்கு தமிழக அரசு துணை நிற்கும்.” என்றார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “காவேரி நதியை மீட்பதற்காகவும் விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் காவேரி கூக்குரல் என்ற இயக்கத்தை சத்குரு தொடங்கி இருக்கிறார். சத்குரு என்றாலே பிரமாண்டம் தான். ஆன்மீகத்தில் சிவனுக்கு பிரமாண்டமாக சிலை வைத்துள்ள சத்குரு இப்போது மக்கள் பணியில் பிரமாண்டத்தை வெளிகாட்டி இருக்கிறார். 242 கோடி மரங்களை நடுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. வரலாற்றில் சத்குருவுக்கென்று ஒரு தனி இடம் உண்டு.

வரலாற்றில் சிலர் மட்டும் தான் மனிதரில் புனிதராக நம்முடன் இருந்து பயணித்ததை பார்த்து இருக்கிறோம். அந்த வகையில் பேரறிஞர் அண்ணா, புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். மனிதரில் புனிதராக நம்முடன் இருந்து பயணித்தனர். புரட்சி தலைவி அம்மா அவர்கள் மனிதரில் புனிதராக இருந்தார். அவர் வழியில் நாங்கள் இப்போது பயணிக்கிறோம். சத்குருவும் இப்போது மனிதரில் புனிதராக நம்முடன் இருந்து கொண்டிருக்கிறார். சத்குருவின் முயற்சிகளுக்கு நானும் முதல்வரும் இணைந்து 100 சதவீதம் ஆதரவு அளிப்போம்” என்றார்.

தமாகா தலைவர் திரு.ஜி.கே.வாசன் பேசுகையில், “இந்திய நாடு வளம் பெறவும் அனைவரும் வளம் பெறவும் சத்குரு பல பணிகளை செய்து வருகிறார். காவேரி நதிக்கு புத்துயிரூட்டும் அவரின் புனித பயணம் நிச்சயம் வெற்றி பெறும். அதற்கு தமிழக அரசு 100 சதவீதம் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

திரு.பிரதாப் ரெட்டி பேசுகையில், “நம் உடலில் 80 சதவீதம் நீர் தான் உள்ளது. விவசாயத்துக்கு நீர் மிக மிக அவசியம். சத்குரு எடுத்துள்ள இந்த முயற்சியால் அவர் தலைமுறை தலைமுறைகளுக்கு நினைவில் நிற்பார்.” என்றார்.

திரைப்பட நடிகை திருமதி.சுஹாசினி மணிரத்னம் பேசுகையில், “நான் கடந்த 6 மாதங்களாக சத்குருவை சந்திக்கும் போதெல்லாம் அவர் காவேரி, காவேரி என்று தான் பேசி கொண்டிருக்கிறார். அவரின் உள் மூச்சும் வெளி மூச்சும் காவேரியாக இருக்கிறது. அவரின் இந்த பணிக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்” என்றார்.

முன்னதாக, பிரபல நாட்டுப்புற பாடகர்கள் திரு.செந்தில் கணேஷ் மற்றும் திருமதி.ராஜலெட்சுமி அவர்களில் இசை நிகழ்ச்சியும், ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

 

0 Comments

Leave a Comment

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password

Translate »