சீட் பங்கு வைப்பதில் திமுக, காங்கிரஸ் இடையே டமால் டுமீல் – சூடு பிடித்திருக்கிறது உள்ளாட்சி தேர்தல் களம் !

dmk news

’தலைவர் சொல்ல வேண்டியதை எதாவது மாவட்ட செயலாளர் மூலமாகத்தான் சொல்வார்’ என்பார்கள் திமுகவினர். அந்த வகையில்தான் பார்க்கப்படுகிறது சமீபத்தில் கே.என்.நேரு பேசிய பேச்சு.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் ’ராகுல்காந்திதான் பிரதம வேட்பாளர்’ என்று முந்திக் கொண்டு அறிவித்தார் திமுக தலைவர் ஸ்டாலின். அதனால் இந்திய அளவில் ஸ்டாலின் முக்கிய பிரமுகராக பார்க்கப்பட்டார்.

அதேவேளையில், பிரதமர் கனவில் மிதந்த சில எதிர்கட்சிகளின் பேராசை காரணமாக ஸ்டாலின் வாக்கு பொய்த்து போனது. காங்கிரஸால் எதிர் கட்சி அந்தஸ்க்கு கூட வர முடியவில்லை. ராகுல்காந்தி இப்போது கட்சி பொறுப்பை கூட ஏற்க மறுத்து வருகிறார். அந்த அளவிற்கு காங்கிரஸின் நிலமை படுமோசமாக இருக்கிறது.

இந்தநிலையில் உள்ளாட்சி தேர்தலை நடத்திவிடுவோம் என ஆளும் அதிமுக அரசு தரப்பு சொல்லிக் கொண்டிருக்கிறது. நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் அதிமுக அரசு கவிழும் அளவிற்கு நிலைமை போய்விடவில்லை என்பதால் இந்த சூட்டோடு சூடாக உள்ளாட்சி தேர்தலை நடத்திவிடவேண்டும் என்று எண்ணுகிறது அதிமுக.

அதன் அடிப்படையில் அரசியல் கட்சியினர் உள்ளாட்சி தேர்தல் பணியை தொடங்கிவிட்டனர். கூட்டணி கட்சிகளிடையிலான ’சீட் பங்கீடும்’ அதில் முக்கிய இடத்தில் இருக்கிறது.

இதற்கிடையே தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை குறித்த போராட்டங்கள் நடந்து வருவதால் உள்ளாட்சி தேர்தல் தற்போது நடத்தப்படுமா ? என்கிற சந்தேகமும் எழுந்திருக்கிறது.

தண்ணீர் பிரச்னையை முன்வைத்து உள்ளாட்சி தேர்தல் வேலையை தொடங்கிவிட்டது திமுக. நடந்து முடிந்த தேர்தல் மூலம் அதிமுக அரசை வீழ்த்த முடியவில்லை என்றாலும் கனிசமான அளவு எம்.பிக்களை பெற்றிருப்பதன் மூலம், மக்கள் தங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்று நம்புகிறது திமுக. எனவே உள்ளாட்சி தேர்தலை அவர்களும் ஆர்வமாக எதிர்பார்க்கிறார்கள்.

இந்தநிலையில் ’உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டும். காங்கிரசுக்கு எத்தனை நாள் பல்லக்கு தூக்குவது?’ என்று போட்டு உடைத்தார் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு. திருச்சியில் கடந்த 22-ம் தேதி தண்ணீர் பிரச்னைக்காக நடந்த ஆர்ப்பாட்டத்தின் போதுதான் அவருக்கு அப்படியொரு கோபம்.

‘’பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு நமது கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. ஆனால் கடந்த திமுக ஆட்சியின் போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செல்லக்குமார், மயூரா ஜெயக்குமார் ஆகியோர் நமது ஆட்சியை தொடர்ந்து மோசமாக விமர்சித்து வந்தார்கள்.

ஆனால் அடுத்த தேர்தலில் நம்மை விமர்சித்த அவர்களின் வெற்றிக்கு நாம்தான் பாடுபட வேண்டியிருந்தது. வரும் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸுக்கு இத்தனை சதவீதம் இடம் ஒதுக்க வேண்டும் என்று காஞ்சிபுரத்தில் ஒருவர் பேசியிருக்கிறார். காங்கிரஸில் உள்ள சிலர் பேசுவது சரியாக இல்லை.

அவர்கள் கட்சித் தலைமைக்கு தெரிந்துதான் பேசுகிறார்களா? அல்லது கட்சித் தலைமையின் ஒப்புதலோடுதான் பேசுகிறார்களா என்று தெரியவில்லை. உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸுக்கு இத்தனை சதவீதம் ஒதுக்க வேண்டும் என்பதை தலைவர் ஸ்டாலின் ஏற்க கூடாது. உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப்போட்டியிட வேண்டும். காங்கிரஸுக்கு எத்தனை நாள் நாம் பல்லக்கு தூக்குவது? குறைந்த பட்சம் திருச்சியிலாவது திமுக தனித்து போட்டியிட வேண்டும் என்று தலைமையை வலியுறுத்துவேன்’’ என்று கோரிக்கை வைத்த நேரு, ’இருப்பினும் கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்’ என்று முடித்தார் கே.என்.நேரு.

இதனால் திமுக – காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், கே.என்.நேருவுக்கு கண்டனம் தெரிவித்தார். ’‘கே.என்.நேரு முன்னாள் அமைச்சர், மூத்த தலைவர். ஆனால் எந்த கருத்தானாலும் அதை இறுதி செய்வது திமுக தலைவர் ஸ்டாலின்தான்.

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணிதான் வெற்றி பெற்றது. உள்ளாட்சித்தேர்தலில் கடந்த முறை சென்னை மாநகராட்சியில் 200 சீட்டுக்கு 14 கொடுத்தனர்.

கூட்டணி தர்மத்துக்காக தலைமைக்கு கட்டுப்பட்டு அதனை ஏற்றுக் கொண்டோம். ஒவ்வொரு கட்சியும் தனித்து நிற்கத்தான் ஆசைப்படுவார்கள்.

உள்ளாட்சித்தேர்தலை பொறுத்தவரை தொண்டர்களின் தேர்தல். தனது கட்சியின் கருத்தை கே.என்.நேரு கூறியுள்ளார். அவர் மூத்த தலைவர் என்பதால் சொல்வதற்கு உரிமை உள்ளது.

காங்கிரஸ் செயற்குழுவில் எங்களின் கருத்தை சொன்னோம். இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுக தலைவரிடாம் பேசி என்ன செய்யப்போகிறார் என்று தெரியவில்லை.

தேர்தல் முடிந்தவுடன் இதுபோன்ற மன கசப்பு வரத்தான் செய்யும். தலைவர்கள் கூடிப்பேசி இதை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். எல்லா கட்சிகளுக்கும் வாக்கு வங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை இந்தியா முழுவதும் வாக்கு வங்கி உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஒரு சில தொகுதிகளில் எங்களுக்கு வாக்கு வங்கி இல்லாமல் இருக்கலாம். ஆனால் பல இடங்களில் வாக்கு வங்கி உள்ளது.

சட்ட சபையில் திமுக கொண்டு வரும் நம்பிக்கை இல்லா தீர்மானம் விரைவில் வர இருக்கிறது. இந்த தீர்மானத்தை தீர்மானிக்கும் முக்கிய ஓட்டுக்களாக காங்கிரஸ் கட்சியின் 7 ஓட்டுக்கள் இருக்கின்றன.

திமுக கொண்டு வரும் தீர்மானத்துக்கு ஆதரவாகத்தான் அந்த 7 எம் எல் ஏக்களும் வாக்களிபார்கள். இது கே.என்.நேருக்கு தெரியாதா? திமுகவும் மிக பெரிய தோல்வியை சந்தித்துதான் இப்போது மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது.

காங்கிரஸும் படு தோல்வியை சந்தித்துதான் தமிழகத்தில் இப்போது வெற்றி பெற்றிருக்கிறது. இந்த தேர்தலை பொறுத்தவரை அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். பல்லக்கு நாங்கள் யாரையும் தூக்க சொல்லவில்லை. சூழ்நிலையை பொறுத்துத்தான் கூட்டணி அமைகிறது’’ என்று அடுக்கடுக்காக அள்ளி வீசினார் தியாகராஜன்.

அன்று மதியமே நிருபர்களிடம் பேசிய நேரு, ‘’திமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதன் அடிப்படையில் கட்சியின் மாவட்ட செயலாளராக எனது எண்ணத்தைதான் ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவித்தேன். காங்கிரஸ் கட்சியில் பேசிய சிலர் உள்ளாட்சி தேர்தலில் எங்களுக்கு அதிக இடம் ஒதுக்கி தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக எங்களது ஆட்களுக்கு அதிக இடங்கள் வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நான் அவ்வாறு பேசினேன். மற்றபடி காங்கிரஸ் கூட்டணியில் வெளியேற வேண்டும் என்று நான் பேசவில்லை. தலைவரின் முடிவுக்கு கட்டுப்படும் மாவட்ட செயலாளராக என்றுமே நான் இருப்பேன்’’ என்றார்.

இதற்கிடையே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, 23-ம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், ‘’தமிழகத்தில் அமைக்கப்பட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என்பது சில பார்லிமெண்ட் , சட்ட மன்ற தேர்தலுக்காக அமைக்கபட்டதல்ல.

இந்தியாவின் இறையாண்மையை காக்க வேண்டும். சாதி, மத பேதமற்ற சமதர்ம சமுதாயத்தை அமைக்க வேண்டும்.சமூக நீதியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்டதாகும்.

இந்த கூட்டணியை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல், திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் உயர்ந்த நோக்கத்தில் அமைத்தார்கள். ‘’உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கன் கலைவதாம் நட்பு’’ என்னும் வள்ளுவன் வாக்கிற்கிணங்க, இந்தியாவின் பிரதம மந்திரி வேட்பாளராக தலைவர் ராகுலை, ஸ்டாலின் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி முன்மொழிந்தார்.

இதன் மூலம் கோடிக்கணக்கான தேசிய தோழர்களின் இதயத்தில் ஸ்டாலின் நீங்கா இடம் பெற்றிருக்கிறார். இந்த வரலாற்றுபுகழ்பெற்ற கூட்டணியைச் சிலர் சிறு ஆசைக்காக சிதைப்பது என்பதை எம்மால் ஏற்றுக் கொள்ள இயலாது.

உயிர் தியாகம் செய்வதற்கும் நமது மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தயாராக இருக்க வேண்டும் என்பதே எமது லட்சியமாகும். நமது நோக்கத்தை நிறைவேற்றுகிற இடத்தில் இமய மலையே குறுக்கிட்டாலும் அதனை தகர்த்தெறிந்து வெற்றி காண வேண்டிய நாம், இடையில் குறுக்கிடும் சிறு சிறு முட்புதர்களுக்காக தயங்கி நிற்க வேண்டிய அவசியம் இல்லை.

கூட்டணியை பற்றியோ, தேர்தல்களை பற்றியோ, கூட்டணி கட்சிகளோடு பேசுகிற அதிகாரம் காங்கிரஸ் தலைமைக்கு மட்டும்தான் உண்டு. மற்றவர்கள் அதுபற்றி பேசுதல் கூடாது. தங்களுக்கு தோன்றும் எண்ணங்களை நேரிலோ, கடிதம் மூலமோ காங்கிரஸ் தலைமைக்கு தெரிவிக்கலாமே தவிர, ஊடகங்கள் மூலமாக எந்த செய்தியையும் யாரும் தெரிவிக்க கூடாது.

அப்படி கட்டுப்பாடின்றி செயல்படுபவர்கள் உடனடியாக கட்சியிலிருந்து அகற்றப்படுவார்கள் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். திமுக முன்னோடி கே.என்.நேரு சில கருத்துக்களை சொல்லியிருக்கிறார். அது அவருடைய தனிப்பட்ட உரிமை. திமுகவின் தலைமையில் தமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைக்கப்பட்ட தென்பது, தலைவர் ராகுல், ஸ்டாலினின் உதிரத்தால் கையெழுத்திடபெற்றதாகும்.

அதை அழகிரி நினைத்தாலும் அண்ணன் நேரு நினைத்தாலும் பிரித்துவிட முடியாத உறுதியான கூட்டணியாகும். தமிழகத்தில் கடந்த தேர்தலில் இந்தகூட்டணி பெற்ற வெற்றியை போல் தொடர்ந்து பல வெற்றியை பெற அனைவரும் இணைந்து செயல்படுவோம்’’ என்று கூட்டணிக்கு பங்கம் வந்துவிட கூடாது என்கிற பொறுப்புணர்வோடு அமைந்திருந்தது அந்த அறிக்கை.

இந்த விவகாரம் குறித்து திமுகவில் சிலரிடம் பேசினோம், ‘’ஆமாம் இந்தமாதிரி பேசவில்லை என்றால் காங்கிரஸார் அதிக சீட் கேட்பார்கள். இப்போ கூட்டணியில் இருந்தால் போதும் என்று சும்மா இருப்பார்கள் அல்லவா?’’ என்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியில் சிலரிடம் பேசினோம், ‘’உள்ளாட்சியில் அதிகம் நம்ம கட்சியினர் வரவேண்டும் என எல்லா கட்சியுமே விரும்பும். அதைத்தான் எங்க கட்சியும் விரும்புகிறது. கூட்டணியில்லாமல் தனித்து போட்டி என்றால் எங்களுக்கு மட்டும் நஷ்டம் இல்லை. அதை காங்கிரஸ் புரிந்து கொண்டிருக்கிறது’’ என்றனர்.

இந்த விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் இதுவரை கருத்து சொல்லவில்லை என்பது குறிப்பிட தக்கது !

நடுநிலை.காம்

 

0 Comments

Leave a Comment

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password

Translate »