திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணி திருவிழா – கொடிமரத்திற்கு மகா தீபாராதனை

thiruchendur

தூத்துக்குடி, ஆக. 20

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இக்கோயிலில் நடக்கும் பல்வேறு விழாக்களில் முக்கியமானது ஆவணி திருவிழா. இத்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கிது. இதையொட்டி அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டு அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது.

அதிகாலை 3 மணிக்கு கொடிபட்ட வீதி உலா நடந்தது. தொடர்ந்து கோயில் இரண்டார் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில் கொடியேற்றும் வைபவம் அதிகாலை 5 மணிக்கு துவங்கியது. கொடிபட்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதிகாலை 5.20 மணிக்கு பஞ்ச வாத்தியங்கள் முழங்க ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என பக்தி கோஷம் அதிர கற்பகவீரகுமார் சிவாச்சாரியாரால் கொடியேற்றப்பட்டது.

பின்னர் கொடிமரத்திற்கு 16 வகையான அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து கொடிமரம் தர்ப்பைபுல், வண்ணமலர்கள், பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. திரிசதந்திரர்களால் வேதபாராயணம், ஒதுவார்களால் தேவாரம் திருப்புகழ் பாடப்பட்டு பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.

மாலை 4.30 மணிக்கு அப்பர் சுவாமிகள் தங்கசப்பரத்தில் உழவாரப்பணி செய்து கோயிலை சேர்ந்தார். இரவு 7 மணிக்கு ஸ்ரீபெலி நாயகர் அஸ்திரதேவருடன் தந்தபல்லக்கில் கோயிலிருந்து புறப்பட்டு வீதி உலா நடந்தது.

திருவிழா நாட்களில் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி அம்மன் தினமும் பல்வேறு சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து சிவன் கோயிலை சேருகின்றனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 5ம் திருவிழாவான 24ம் தேதி சிவன் கோயிலில் சுவாமி, அம்மனுக்கு குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது. 7ம் திருவிழாவான 26ம் தேதி உருகுசட்டசேவையும், மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் தங்கசப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலாவும், 8ம் திருவிழாவான 27ம் தேதி அதிகாலை சுவாமி சண்முகர் வெள்ளிசப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்திலும், பகல் 10.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்திலும் வீதி உலா நடக்கிறது.

விழாவின் முக்கிய உச்சகட்ட நிகழ்ச்சியாக 10ம் திருவிழாவான 29ம் தேதி அதிகாலை தேரோட்டம் நடக்கிறது. 31ம் தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா நாட்களில் காலை முதல் இரவு வரை கோயில் கலையரங்கில் பக்திசொற்பொழிவுகள், ஆன்மீக நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

ஏற்பாடுகளை கோயில் தக்கார் கண்ணன் ஆதித்தன் மற்றும் இணை ஆணையர் குமரதுரை ஆகியோர் செய்துள்ளனர்.

 

0 Comments

Leave a Comment

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password

Translate »