நடுநிலைநியூஸ்-க்கான நம்பர் 1 இணைய தளங்கள் – நடுநிலை.காம், நடுநிலைநியூஸ்.காம்.!

nadunilai.com

அனைவருக்கும் அன்பான வணக்கம் !

நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்கிற ஐந்து வகையின் தொகுப்பே இந்த உலகம். இயக்கங்கள் எல்லாம் இவைகளால் மட்டுமே. அதுபோல் ஒன்று, இன்னொன்றை சார்ந்திருந்தே ஆகவேண்டும். இதெல்லாம் எழுதப்படாத விதி.

உயிர்கள் உயிர் வாழ வேண்டும் என்றால், தாவரம் வளரவேண்டும். தாவரம் வளர வேண்டும் என்றால், தண்ணீர் வேண்டும். தண்ணீர் வேண்டும் என்றால், மழை பெய்யவேண்டும். மழை பெய்யவேண்டும் என்றால், காற்று வீசவேண்டும். காற்று வேண்டும் என்றால், மரங்கள் வேண்டும். மரங்கள் வேண்டும் என்றால், செடி,கொடியை கொண்ட வனங்கள் வேண்டும்.

வனங்கள் வேண்டும் என்றால், மாமிசம் உண்ணும் விலங்குகள் வேண்டும். மாமிசம் உண்ணும் விலங்குகள் வேண்டும் என்றால், தாவரம் உண்ணும் விலங்குகள் வேண்டும். தாவரம் உண்ணும் விலங்குகள் வேண்டும் என்றால், தாவரம் அவசியம். அந்த தாவரம் வேண்டும் என்றால், நிச்சயமாக அதே மழை அவசியம். வாழ்க்கை சுழற்சி என்பது இப்படித்தான் ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது. இதில் எதோ ஒன்றில் மாற்றம் ஏற்பட்டால், சுழற்சியிலும் மாற்றம் ஏற்படலாம்.

இந்த உண்மையை உணர்ந்த ஆதிமனிதன், இயற்கையை தெய்வமாக வழிபட்டான். அதன் மூலம் அவைகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டது. வாழ்க்கை சுழற்சிக்கு அது உத்தரவாதமாகவும் இருந்தது.

அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த இயற்கை, ஓரளவு கல்வி அறிவு வந்துவிட்டதாக சொல்லப்படுகிற இந்த காலத்தில்தான் அளவிடமுடியாத வகையில் அழிக்கப்பட்டு வருகிறது. இந்த இயற்கை ஆர்வத்திற்கும் ‘நடுநிலை’ என்கிற வார்த்தைக்கும் என்ன சம்மந்தம் என நீங்கள் கேட்கலாம்?.

உருவாகுதல், வாழ்தல், முடிதல் என்கிற வாழ்வியல் சூத்திரத்தில் இயற்கை முக்கிய இடத்தில் இருக்கிறது. அந்த இயற்கை அமைப்பிற்கும் வாழ்க்கை ஓட்டத்திற்கும் இடையே சமநிலையை ஏற்படுத்துவதும் நடுநிலையாளரின் கடமையே.

உயிர்கள் வாழ்வதற்கு இயற்கையின் பாதுகாப்பு மிகவும் அவசியம். நம்முடைய வாழ்நாள்களில் எத்தனையோ உயிர்கள் வாழ்ந்து முடிக்கும் முன்பே அழிந்து போயிருப்பதை பார்த்திருக்கிறோம்.

அப்படி அழியவிடாமல் தடுக்கும் கடமை, இயற்கையை ஆட்டிப்படைக்கும் மனிதனுக்கு இருக்கிறது. பல்வேறு வகையில் வளர்ச்சி பெற்றுவிட்டதாக சொல்கிற தற்போதைய மனிதன், இயற்கை குறித்த விழிப்புணர்வை மறந்தவனாக திகழ்கிறான்.

ஆதிமனிதன், உணவிற்காக விலங்கோடு போராடினான். உணவை உற்பத்தி செய்யும் நிலத்துக்காக தனக்குள் போராடினான். எல்லை விரிவாக்கத்துக்காக அணிசேர்ந்து போராடினான். தனது கலாச்சாரத்தை பரப்புவதற்காக எல்லைதாண்டி போராடினான், இப்பவும் போராடுகிறான்.

பிழைப்புக்காக.. அதன் பிறகு வறுமையை போக்க.. தொடங்கிய அந்த போராட்டங்கள், பிறகு ஆட்சி, அதிகாரத்தை பிடிப்பதற்காக என்றானது. இந்த பரபரப்பான பொருளாதார தேடுதல் போராட்டங்களுக்கு இடையில், பிறந்ததின் அர்த்தமும் அடுத்து நகர வேண்டியதின் அவசியமும் மறந்தே போய்விட்டது இன்றைய மனிதனில் பலருக்கு.

வாழ்க்கை அனைத்தையும் ‘தனக்கானது’ என ஆக்கிக் கொள்வோர் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் உண்மை, நேர்மை, எளிமை போன்ற பண்புகள் மக்களிடமிருந்து விடைபெற்று கொண்டிருக்கிறது..

பண்புகள் நிறைந்திருக்க வேண்டிய அரசியல், பணம் காய்க்கும் மரங்களாக பார்க்கப்படுகிறது. ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணம், பணம் சம்பாதிப்பது மட்டும்தான் அவர்களின் வேலை’ என்று முடிவுக்கு வந்துவிட்டது இன்றைய சமூகம்?.

அதனால் ‘அரசியலே மோசம்’ என்கிறார்கள் பலர். நேர்மை. எளிமை, திறமை உள்ளவர்கள், தேசம் மீது நேசம் கொண்ட இளைஞர்கள் இந்த அரசியலுக்குள் வரமுடிவதில்லை. சாதி,மதம்,மொழி போன்ற பிரிவு மூலம் மட்டுமே வரமுடிகிறது.

சூழ்ச்சிகள் மூலம் அடையும் வெற்றியைத்தான் இக்கால அரசியலில், ‘வல்லமை’ என்று வர்ணிக்கிறார்கள். முரட்டுத்தனத்திற்கும் மூர்க்கத்தனத்திற்கும் ‘வீரம்’ என பெயர் வைக்கப்படுகிறது.

கொள்கையற்ற கொள்ளையை ‘திறமை’ என்கிறார்கள். ஏமாற்ற தெரியாதவர் ‘ஏமாளி’ என எள்ளி நகையாடப்படுகிறார். அரசியலில் நீதி, நேர்மை, நியாயம் என்பதை ‘பழையகதை‘ என்கிறார்கள்.

படித்து முன்னேறவேண்டிய மாணவர்களை போராட்டங்களில் ஈடுபடுத்துகிறார்கள். உணர்ச்சி வசப்படுகிற மாணவர்கள், எதாவது சிக்கலில் சிக்கி வாழ்க்கையை இழந்து வருகிறார்கள்.

ஒரு காலத்தில் நல்லதை செய்ய தூண்டிய சினிமா இப்போது, ஒரு சிலவற்றை தவிர பல படங்கள் வன்முறையும் ஆபாசமும் சூழ்ச்சியால் வெற்றி பெறுவது எப்படி என்பது போன்ற குறுக்கு புத்தியை வளர்ப்பது போன்றதாகவே இருக்கிறது. கொடிய வில்லனை திறமைசாலியாக காட்டுகிறார்கள். வீட்டைவிட்டு வெளியேறிய சிறுமி ஒருவர், நீதிமன்றத்தில் சொன்ன வாக்கு மூலமே அதற்கு சாட்சி.

வாழ்க்கை வழிமுறையை வலியுறுத்தும் ‘மதங்கள்‘ கூட சில நேரங்களில் மதம்பிடித்த யானை போல் வன்மம் கொள்கிறது. உணர்வுகளையும் தகவல்களையும் பகிர்ந்து கொள்ள பயன்படும் ‘மொழி‘யும் எல்லை பிரச்னையாகி போய்விடுகிறது.

ஆன்மிக நடைமுறைகள் சில, வகுக்கப்பட்ட நோக்கம் அறியாமல் நகர்வதால் அடுத்தடுத்த தலைமுறையில் அது மூடநம்பிக்கை நிலைக்கு தள்ளப்படுகிறது. அதை சுட்டி காட்டி தடுக்க அங்கே பகுத்தறிவாளர்கள் அவசியப்படுகிறார்கள்.

உற்பத்தியை பெருக்குவதற்காக இரசாயன உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளை கண்டுபிடித்தால், விவசாயம் முழுவதையும் அதுவே ஆட்கொண்டு விடுகின்றன. அதன் மூலம், பல நுண்ணுயிர்கள் அழிவது மட்டுமில்லாமல் நிலமும் மலட்டுத்தன்மை அடைகிறது.

விழிப்புணர்வு இல்லாத சில விவசாயிகள் பூச்சுக் கொல்லியை அதிகம் பயன்படுத்துவதுபோல், காய்களை பழுக்க வைப்பதற்காக வியாபாரிகள் சிலர் கெமிக்கலை பயன்படுத்துகிறார்கள். அதிரடியாக ரெய்டு போகும் அதிகாரிகள் அந்த பழங்களை கைப்பற்றி அழிக்கிறார்களே தவிர, மக்கள் ஆரோக்கியத்தோடு விளையாடும் வியாபாரிகள் மீது, அடுத்து இதுபோன்று நடக்காதவாறு கடுமையான நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.

ஓட்டு வங்கி அரசியலில் வீழ்ந்து கிடக்கும் அரசியல்வாதிகளால் தவறு செய்வோரை தட்டி கேட்க முடியவில்லை. மாறாக அவர்களை காப்பாற்றுவதும் அவர்களுக்கு சாதகமாக வாதிடுவதுமாக நிலைதடுமாறுகிறார்கள்.

மாநிலங்களிடையே நிலவி வரும் தண்ணீர் பங்கீடுதல் குறித்த விவகாரமும். அண்ணன் தம்பி என்கிற உறவில் அன்பால் ஒன்றுபட்டு இருக்க வேண்டிய மாநில மக்களிடையே அரசியல் நோய் ஆட்டிப்படைக்கிறது.

தண்ணீர் கொடு என்று ஒருத்தர் அரசியல் செய்தால், கொடுக்காதே என்று இன்னொருத்தர் அரசியல் செய்கிறார். இந்த அரசியல்போட்டியினால் பகை, பனை மரம்போல் வளர்ந்து நிற்கிறது.

மக்களிடம் பேசி இசைய வைக்கும் சக்தி, பெரும்பாலான அரசியல் வாதிகளிடம் இருப்பதாக தெரியவில்லை. அதற்கு காரணம், நடுநிலை அவர்களிடம் இல்லை. அவர்கள் எங்கோ ஒரு பக்கம் சார்புடையவர்களாகவே இருக்கிறார்கள்.

தேசிய ஒருமைப்பாடு பாதிக்கும் வகையில் நம்மிடையே வேறுபாடுகள், விரோதங்கள் வளர்க்கப்படுகின்றன. ஒவ்வொரு மாநிலமும் இந்தியா என்கிற உடம்பின் உறுப்புக்கள்தான் என்கிற உணர்வை அதிகப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.

அன்பும் பண்பும் தனிமனித ஒழுக்கமும் நிறைந்திருக்க வேண்டிய மனிதன், வாழும்வரை சந்தோஷமாக வாழ்வோம் என்று சொல்லிக் கொண்டு எதேதோ தவறு செய்கிறான். மக்களை வழிநடத்த துடிப்போர் கூட தனிமனித ஒழுக்கம் குறித்து வலியுறுத்தி பேசுவதாக தெரியவில்லை. தனிமனித ஒழுக்கம் உள்ளவரை மட்டுமே, பொதுவாழ்க்கையில் ஈடுபட மக்கள் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

தனிமனித ஒழுக்கம், அன்பு, பண்பு,பாசம் எல்லாம் எங்கே நிலைத்திருக்கிறதோ அங்கே நடுநிலை சிந்தனை இருக்கும். இவைகள் எல்லாம் எங்கே சேர்ந்து இருக்கிறதோ அங்கே சகல நன்மைகளும் நிறைந்திருக்கும். எங்கும் எதிலும் எப்போதும் இவைகள் அனைத்தும் நிறைந்திருக்க வேண்டும் என்றால், முதலில் தனிமனித ஒழுக்கம் அங்கே வளர வேண்டும். அதை வலியுறுத்தி நிலைநாட்டுவதே நமது ‘நடுநிலை.காம்’ மற்றும் ‘நடுநிலைநியூஸ்.காம்’ என்கிற ஊடகங்களின் வேலையாகும்.

இந்த ஊடகங்கள், அறவழியை மட்டுமே ஆதரிக்கும். நூதன போராட்டம் என்கிற பெயரில் ஆசாதாரண நிலையை உருவாக்கும் செயலை ஆதரிக்காது. அரசுக்கும் மக்களுக்கும் இடையே இணைப்பு பாலமாக இருந்து நல்லது மட்டுமே நடக்க செயல்படும்.

உள்ளூர் முதல் உலகம் வரையிலான செய்திகள், அரசியல், கல்வி, கலை, கலாசாரம், பெண்கள்நலம், தொழிலாளர்கள் நலம், மருத்துவம், வர்த்தகம், விளையாட்டு, விவசாயம் அரசு திட்டங்கள் உள்ளிட்ட சகலவிதமான தேவைகளுக்கும் வழிகாட்டுகிறது இந்த ஊடகங்கள்.

அதுபோல் ஆதி முதல் அந்தம் வரையிலான வரலாறு, மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யும் வகையில் விவாதம் செய்ய வசதி, பாகுபாடில்லாமல் அனைத்து வகையான ஆன்மிகம், இயற்கைபாதுகாப்பை வலியுறுத்துவது, எது சரி எது தவறு, எது வேண்டும் எது வேண்டாம் என்பதை வெளிப்படுத்துவது, எழும் கேள்விகள் அத்தனைக்கும் பதில்கள் தருவது, பரபரப்புக்காக பண்புகளை உடைக்கா வண்ணம் தகவல் சொல்வது, சமூக அவலங்களை சுட்டிக்காட்டி அதை அகற்ற வலியுறுத்துவது,

நல்லதை ஆதரிப்பது, நல்ல யோசனை சொல்ல செய்வது, தவறுகளை சுட்டிகாட்டுவது, தராசு தட்டை சமன்படுத்தும் படிக்கல் போல், தேவைப்படும் பக்கம் நின்று உதவுவது. ஆக மொத்தம் நல்ல அன்பான பண்பான நடுநிலைநண்பர்கள் மூலம் மக்களுக்கு நல்லது செய்கிறது நடுநிலை.காம்.

பொதுமக்கள் நடுநிலை நியூஸ்-க்கான ’நடுநிலை.காம்’ ஐ பாருங்கள் ஆதரவு தாருங்கள். அன்பால் ஒன்றுபடுவோம் – நல்ல பண்பால் வென்றுவிடுவோம்

எங்கும் எதிலும் எப்போதும் நடுநிலையை விரும்பும் -nadunilai.com S.SARAVANAPERUMAL தொடர்புக்கு : 8056585872, saravanajuvi@gmail.com, nadunilainews100@gmail.com

 

0 Comments

Leave a Comment

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password

Translate »