பட்டியல் இனத்துக்குள் நடந்த ஆணவ படுகொலை – கொடூரத்தின் உச்சம் யாரிடம்தான் இல்லை ?

IMG-20190704-WA0056

ஒவ்வொரு தனிமனிதனும் எதோ ஒரு வகையில் மற்றவர்களைவிட உயர்ந்தவன் என்று காட்டிக் கொண்டால் மட்டுமே  நிம்மதி அடைகிறான். இல்லாத பட்சத்தில் அவன் ஆகிரோஷம் கொள்கிறான். அதை நிரூபிக்க எதாவது வன்முறை நிகழ்த்த வேண்டியது இருக்கிறது.

இந்த ஆணவ நிகழ்வுக்கு மிக உயர்ந்திருக்க வேண்டியதில்லை. ஒரே கூண்டுக்குள் அடைத்த சிங்கங்கள் கூட சண்டையிட்டு தாக்கி கொள்கிறது. அப்படித்தான் தன்னை பெரியவன் என காட்டிக் கொள்ள எதேதோ நடக்கிறது நாட்டில்.

உண்ண உணவு,உடுக்க உடை, இருக்க இடம், படுக்க பாய் என்கிற தேடல் மட்டும் இருந்த காலத்தில் எதேதோ இருந்தது அடிமைத்தனம், ஆணவ போக்கு எல்லாம். இதையெல்லாம் தாண்டி கல்வி என்கிற மாயக் கண்ணாடியை மாட்டிக் கொண்டோர் நகரம் மட்டும் அல்ல, கிராமத்துக்குள்ளும் ஏராளம் உருவாகிவிட்டனர்.

கல்வி என்கிற அந்த மாயக் கண்ணாடி முதலில் தன்னிலையை காட்டும். அடுத்து செல்ல வேண்டிய பாதையை காட்டும். அடுத்து  பல்வேறு விதமான மக்கள் வாழ்கிற மக்களோடு இணைந்து வாழ்வது எப்படி என்பதை காட்டும். மொத்தத்தில் கல்வியை கத்துக் கொண்டால் எல்லா விதத்தையும் வென்று கொள்வார் என்று நம்பப்படுகிறது.

ஆனால் அறிவு வளர வளர அறிந்தது அறிவது எல்லாமே மனிதனை மேலும் மேலும் பழைய காலத்துக்கு கொண்டு போவது போல்தான் தெரிகிறது. ஆண்டாண்டு காலமாக ஆணவம் செய்து பழக்கப்பட்டவர்கள், அந்த நிலையிலிருந்து கீழே இறங்கி வரவேண்டும் என்றால் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் அது எதார்த்தம்.

ஆனால் ஆணவ சிந்தனைக்கு எதிராக குரல் எழுப்பி வருவோரே தனக்குள் அந்த சிந்தனையோடு இருப்பது எந்த விதத்தில் நியாயம் என்பது தெரியவில்லை. 

அப்படியொரு சம்பவம்தான் தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே இன்று (04.07.2019) நடந்திருக்கிறது.

குளத்தூர் அருகே பெரியார்நகர் பகுதியை சேர்ந்தவர் திருமணி என்பவரின் மகன் சோலைராஜ் 23 வயது இளைஞர். சூரங்குடி பகுதியை சேர்ந்த அழகர் என்வரின் மகள் பேச்சியம்மாள் என்கிற ஜோதி 21 வயது பெண்.

இவர்கள் இருவரும் பட்டியலினத்திலுள்ள வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள், அந்த பகுதி உப்பளத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர்.  அப்போது இருவரும் காதல் வயப்பட்டனர். ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்து வந்த காதல் இல்லை இது. உப்பு காற்றுக்கும் உச்சி வெயிலுக்கும் இடையே மலர்ந்த காதல்.

இவர்களின் காதல் வாழ்க்கை வெவ்வேறு சமூகம் என சொல்லிக் கொள்ளும் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. அதிலும் பெண்ணின் குடும்பத்தார் ஏகத்துக்கும் எதிர்ப்பை காட்டினர். இருந்தாலும் காதலில் உறுதியாக இருந்த இந்த ஜோடி, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டது.

அடிமைத்தனம், ஆணவத்தனம் என்கிற நடைமுறைக்கு அச்சப்பட்டு இந்த ஜோடி கோவில்பட்டியில் தங்கிவிட்டது. பெண் வீட்டாரின் நயமான பேச்சை நம்பி பெரியார் நகருக்கு குடிபெயர்ந்தனர் புதுமண தம்பதியர். சோலைராஜ், புதிதாக பெயிண்டர் வேலைக்கு போக, வீட்டிலிருந்து அவருக்கு சமைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார் ஜோதி.

சிறிது காலத்துக்கு பிறகு அவ்வப்போது நடந்த மிரட்டல் குறித்து பெண் வீட்டாருக்கு எதிராக போலீஸில் புகாரும் சொல்லப்பட்டு வந்ததாம். பெரிய அளவில் அதற்கு நடவடிக்கை இல்லாத பட்சத்தில் நேற்று இரவு வீட்டின் முன்பகுதியில் வெளியே படுத்து தூங்கியிருக்கிறார்கள் சோலைராஜ், ஜோதி ஆகிய இருவரும்.

இன்று அதிகாலை அங்கு வந்த மர்மகும்பல், கொடூரமான முறையில் இரண்டு பேர்களையும் படுக்கையில் வைத்தே வெட்டி கொலை செய்திருக்கிறது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற குளத்தூர் போலீஸார், இரண்டு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர். ஆனால், உடனே குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் ஆணவ கொலை என முடிவு செய்து அதற்கு 25 லட்சம் வரை அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இதை அறிவிக்கும் வரை பிரேத பரிசோதனைக்கு அனுமதிக்க மாட்டோம் என்று கொலை செய்யப்பட்ட சோலைராஜ்ன் உறவினர்கள் அடம்பிடித்தனர்.  

இதற்கிடையே படுகொலை செய்யப்பட்ட ஜோதியின் தந்தை அழகரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள். மேலும் சிலரை தேடிவருகிறார்கள். ’மற்றவர்கலை நாளை காலைக்குள் பிடிக்கவில்லை என்றால், பிரேத பரிசோதனை செய்த உடலை வாங்கமாட்டோம்’ என்கிற நிபந்தனையோடு, பிரேத பரிசோதனைக்கு அனுமதித்தனர்.

 

0 Comments

Leave a Comment

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Lost Password

Translate »