திசையன்விளை – வேளாங்கண்ணி அரசு பேருந்தில் வெளிநாட்டு மதுபானம் கடத்தல் – தூத்துக்குடியில் பேருந்து நடத்துனர் கைது

0
351
bus news

வேளாங்கண்ணி, திசையன்விளை இடையே இயக்கப்பட்டு வரும் அரசு பேருந்தில் வெளிநாட்டு மதுபானம் கடத்திய பேருந்து நடத்துனரை மதுவிலக்கு போலீசார் தூத்துக்குடியில் வைத்து கைது செய்தனர். அவரிடமிருந்து 20 வெளிநாட்டு மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள செட்டிக்குளத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார்(வயது 42). அரசு பஸ் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சொந்தமாக நெல்லை மாவட்டம் திசையன்விளையில் செல்போன் விற்பனை கடை இருக்கிறது.

இந்த கடையில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக ஏற்கனவே தூத்துக்குடி மாவட்ட மது ஒழிப்பு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மதுஒழிப்பு அதிகாரி மீகா தலைமையில் மதுவிலக்கு போலீசார் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஜெயக்குமாரை கையும், களவுமாக பிடிக்க திட்டமிட்டனர்.

இந்தநிலையில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து திசையன்விளை நோக்கி வந்த அரசு பேருந்தில் ஜெயக்குமார் மதுப்பாட்டில்களை கடத்திவருவதாக தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்று தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் வந்த அரசு பஸ்சில் மதுவிலக்கு போலீசார் சோதனை நடத்தினர்.

இதில் பேருந்தின், முதலுதவி பொருள்கள் மற்றும் உதிரிபாகங்கள் வைக்கும் பெட்டியில் 20 வெளிநாட்டு ரக மதுபாட்டில்கள் பதுக்கி கடத்திவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடரந்து ஜெயக்குமாரை கைது செய்த போலீசார், அவரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும் பேருந்தில் கடத்திவரப்பட்ட 20 வெளிநாட்டு ரக மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது‌.

இதுகுறித்து, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அதிகாரி மீகா கூறுகையில், கைதுசெய்யப்பட்ட அரசுப்பேருந்து நடத்துனர் ஜெயக்குமார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here