தூத்துக்குடி : முதல்வர் வருகைக்கான ஏற்பாடுகளை அமைச்சர் கடம்பூர்ராஜூ ஆய்வு செய்தார்

0
23
kadambur raju

கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வுக்கூட்டம் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகிறார்.

இதற்காக நாளை(செவ்வாய்கிழமை) காலை 10மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து கார் மூலமாக அவர் நாகர்கோவில் செல்கிறார். அங்கு ஆய்வுப்பணிகளை முடித்து விட்டு நாளைமறுநாள் (11ம் தேதி) காலை அங்கிருந்து முதல்வர் தூத்துக்குடி மாவட்டம் வருகிறார்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக முதல்வர் வருகைக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அமைச்சர் கடம்பூர்ராஜூ நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வு நடத்திய அமைச்சர் கடம்பூர்ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது, கொரோனா தடுப்பு பணிகளை தமிழக முதல் அமைச்சர் சிறப்பாக மேற்கொண்டார். இதனால் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா வைரஸ் தாக்கம் மற்ற மாநிலங்களை காட்டிலும் மிகவும் குறைவாக உள்ளது.

தமிழகத்தில் இன்று(10ம் தேதி) முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான விதிமுறைகள் குறித்து திரையரங்கு உரிமையாளர்களுக்கு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. திரையரங்கிற்கு வருபவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வரவேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும். இந்த பணிகளை சம்மந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் வருவாய்த்துறையினர் கண்காணித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு இடையே நிலவி வரும் பிரச்சினையில் பேச்சுவார்த்தை மூலமாக சுமுக தீர்வு எட்டவேண்டும். இதில் உதவி தேவைப்பட்டால் தமிழக அரசு தலையிட்டு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண உதவிகள் செய்யப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வர் தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.23கோடியில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன கேன்சர் சிகிச்சை மையத்தை திறந்து வைக்கிறார் என்றார்.

பேட்டியின்போது, தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., சின்னப்பன் எம்.எல்-.ஏ., முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here