தூத்துக்குடி : ரூ.16 கோடியில் செலவில் புதிய புற்றுநோய் சிகிச்சை பிரிவு – தமிழக முதல்வர் திறந்து வைத்தார்

0
22
cm news

தூத்துக்குடி:

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.16 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய புற்று சிகிச்சை பிரிவினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

கொரோனா மற்றும் வளர்ச்சி திட்டம் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று 11.11.2020 தூத்துக்குடிக்கு வந்தார். கன்னியாகுமரியிலிருந்து கார் மூலம் வந்த அவருக்கு, வல்லநாடு முதல் தூத்துக்குடி மாநகர் வரையிலும் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் சிறப்பாக வரவேற்பு அளித்தனர்.

வரவேற்பினைத்தொடர்ந்து, முதல் விழாவாக, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.16 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய புற்று சிகிச்சை பிரிவினை தமிழக முதல்வர் திறந்து வைத்தார். மேலும், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.71.61 லட்சம் மதிப்பிலான மத்திய ஆய்வக புதிய கட்டிடத்தினையும் திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார்.தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுப்பணித்துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, பள்ளி கல்வித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர், வழங்கல் துறை, மீன்வளத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் ரூ.22.37 கோடி மதிப்பிலான 16 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.

தொடர்ந்து, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரத்துறை), காவல் துறை, கருவூலம் மற்றும் கணக்குத்துறை, பள்ளி கல்வித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் ரூ.328.66 கோடி மதிப்பிலான 29 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி சிறப்பித்தார்.

மேலும் இலவச வீட்டுமனைப்பட்டா, அம்மா இருசக்கர வாகன மானியம், ஊரக புத்தாக்க திட்டத்தின்கீழ் கொரோனா சிறப்பு நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் என 15ஆயிரத்து ,792 பயனாளிகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூ.37.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதன்பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினருடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடி வருகிறார். இதில், அமைச்சர்கள் கடம்பூர்ராஜூ, விஜயபாஸ்கர், கலெக்டர் சந்தீப் நந்தூரி, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன், சின்னப்பன் மற்றும் அரசு செயலாளர்கள், மற்றும் முக்கிய பிரமுகர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக அரசு மருத்துவ மனைக்கு சென்ற தமிழக முதல்வரிடம் மாரீஸ்வரி என்கிற மாற்றுத் திறனாளி பெண், தனக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என முறையிட்டார். அதனை ஏற்றுக் கொண்ட முதல்வர், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, மாரீஸ்வரிக்கு மருத்துவமனை வார்டு மேலாளர் வேலைக்கான உத்தரவினை வழங்கினார்.

அதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதம் 18 ம் தேதி வல்லநாடு அருகே ரவுடியை பிடிக்கச் சென்றபோது வெடிகுண்டு வீசியதில் உயிர் இழந்த காவலர் சுப்பிரமணியன் மனைவி புவனேஸ்வரிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காயாமொழி அரசுப் பள்ளியில் உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணை மற்றும் ரூ.50 லட்சத்திற்கான நிதி உதவி¬யும் வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here