இந்து சாமியார்கள் குறித்து அவதூறாக சித்தரித்துள்ளதுடன், இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் சர்சைக்குரிய கருத்துக்களுடன் வெளிவந்துள்ள ”மூக்குத்தி அம்மன்” திரைப்படத்திற்கு ‘தணிக்கைக் குழு’ உடனடியாக தடை விதித்திடவேண்டுமென ”சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, தூத்துக்குடி கோரம்பள்ளம், அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி- மஹா காலபைரவர் சித்தர் பீடத்தின் சுவாமிகள் ”சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் வெளியிட்டுள்ள அறிக்கை: பொதுவாக தமிழ் திரைப்படங்கள் சிலவற்றில் இந்துக்கடவுள்கள், இந்து சாமியார்கள் குறித்து கேலி செய்யும் வகையிலான நகைச்சுவை காட்சிகள் வேண்டுமென்றே புகுத்தப்பட்டு வருகிறது.
இதுபோன்ற திரைப்படங்களை வெளியிட தடை விதிக்கவேண்டும், இல்லாதபட்சத்தில் குறிப்பிட்ட ஒரு மதத்தை மட்டும் இழிவுபடுத்தி, அந்த மதத்திற்குரிய மக்களின் மனதை புண்படுத்தும் வகையிலான காட்சிகளை ”திரைப்பட தணிக்கைக் குழு” ஆரம்பத்திலேயே கண்காணித்து, அக்காட்சிகளை நீக்கிய பிறகே இதுபோன்ற திரைப்படங்களை வெளியிடவேண்டும் என்று நான் தொடர்ந்து தமிழக அரசினை வலியுறுத்தி வருகிறேன்.
இந்நிலையில், தற்போது ஓ.டி.டி.யில் வெளியாகியுள்ள ”மூக்குத்தி அம்மன்” என்ற திரைப்படத்தில், இந்து சாமியார்கள் வேண்டுமென்றே அந்த திரைப்பட இயக்குநர்கள் ஆர்.ஜே.பாலாஜி – என்.ஜே.சரவணன் ஆகியோரின் வன்மத்தால் அவதூறாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். அதோடு, கடவுள் நம்பிக்கை இல்லை என்பது போன்ற காட்சிகளும் இந்த படத்தில் ‘லாஜிக்’ என்பதே இல்லாத வகையில் புகுத்தப்பட்டுள்ளது.
திரைப்பட காட்சிகள் என்பது மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம் அதற்காக ஒரு குறிப்பிட்ட மதத்திற்குரியவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் வேண்டுமென்றே இதுபோன்ற காட்சிகளை கேலியாகவும், கிண்டலாகவும் மிகைப்படுத்தி திணித்துள்ளது வன்மையாக கண்டிக்கதக்க செயலாகும்.
இதுவே இந்த திரைப்படத்தின் இயக்குநர், இந்த படம் வெளியாகுவதற்கு முன்பாக வெளியிட்ட டிரைலர்களில் ”மற்றொரு மதத்தை சேர்ந்த சாமியார் ஒருவர் கையில் சி.டி., வைத்துகொண்டு, அதனை வைத்து நோய்வாய்ப்பட்ட ஒருவரை குணப்படுத்தும் வகையிலான காட்சிகளை” வைத்திருத்தார். இந்த காட்சி அந்த மத மக்களிடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், தற்போது ஓ.டி.டி.,யில் வெளியாகியுள்ள முழுநீள திரைப்படத்தில் இந்த காட்சிகள் ”என்ன மாயமோ..? மந்திரமோ..?” என்ற ரீதியில் இல்லாமல் படம் வெளியிடப்பட்டுள்ளது. அப்படியெனில் அந்த மதத்தினருக்கு பயந்து திரைப்பட இயக்குநர்கள் திரைப்படத்தில் இருந்த அந்த காட்சிகளை எல்லாம் நீக்கி விட்டு தற்போது படத்தை வெளியிட்டுள்ளனர்.
இதுவே, இந்துக்கள் என்றால் எதுவும் கேட்கமாட்டார்கள், அவர்களை எப்படி வேண்டுமென்றாலும் கேலி, கிண்டல் செய்யலாம் என்ற ரீதியில் திரைப்படத்தின் இயக்குநர்கள் ”மூக்குத்தி அம்மன்” படத்தில் இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையிலான காட்சிகளை அமைத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.
இப்படி வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தில் முழுக்க முழுக்க இந்து சாமியார்கள் அனைவரும் சமூகத்திற்கு எதிரான விரோதிகள் போன்ற காட்சிகளை வேண்டுமென்றே அமைத்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியதாகும்.
மேலும், இதுபோன்ற கேலியான, அவதூறான காட்சிகள் மக்கள் மனதில் தேவையில்லாத விஷமத்தை விதைப்பதுடன், நாடு முழுவதும் மத ஒற்றுமையுடன் சகோதரர்களாக வாழ்ந்து வரும் இந்துக்களின் மனதை புண்படுத்துவதோடு, கொச்சைப்படுத்தும் வகையில் அமைத்திருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
எனவே, தமிழக அரசின் ”திரைப்பட தணிக்கைக் குழு” உடனடியாக இந்தப்படத்திற்கு தடை விதித்திடவேண்டும். இல்லாதபட்சத்தில் இந்த படத்தில் இருக்கும் இந்து மக்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய காட்சிகள், இந்து சாமியார்களை கேலி செய்யும் வகையிலான காட்சிகள் அனைத்தையும் உடனடியாக நீக்கிடவேண்டும்.
இந்து மதத்தினை கேலி-கிண்டல் செய்து இழிவுபடுத்துவதோடு, இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையிலான காட்சிகளுடன் கூடிய இதுபோன்ற சமூக பொறுப்பற்ற திரைப்படங்களை இனிவரும் காலங்களில் ”திரைப்படக் கண்காணிப்புக் குழு” ஆரம்பத்திலேயே கண்காணித்து வெளியிடுவதற்கு தடை விதித்திடவேண்டுமென வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.