சாத்தான்குளம், நவ.17-
ஒருதலை காதலை ஏற்க மறுத்த பெண் வக்கீலுக்கு கொலை மிரட்டல் விடுத்த சாத்தான்குளம் வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சாத்தான்குளம் சாயக்கார தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகள் முத்துபார்வதி(27). வழக்கறிஞரான இவர் திருச்செந்தூரில் பணியாற்றி வருகிறார். சாத்தான்குளம் அருகேயுள்ள ஆனந்தபுரம் சிஎஸ்ஐ. சர்ச் தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் மகன் மைக்கேல்ராஜ். இவர் பெண் வக்கீலை அடிக்கடி பின்தொடர்ந்து சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் முத்துபார்வதி எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் அவர்களிடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 13ம்தேதி சாத்தான்குளம் பஜாரில் முத்துபார்வதி நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த மைக்கேல்ராஜ், தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் உன்னை கொலை செய்துவிட்டு நானும் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டல் விடுத்தாராம். மேலும் இதுதொடர்பாக சமூக வலைதளத்திலும் பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மைக்கேல்ராஜ் மீது சாத்தான்குளம் போலீசில் முத்து பார்வதி புகார் அளித்தார். எஸ்.ஐ. முத்துமாரி விசாரணை நடத்தி மைக்கேல்ராஜை போலீசார் தேடி வருகின்றனர்.