தூத்துக்குடியில் தரமற்ற எல்.இ.டி விளக்குகள் – அமைச்சர் வேலுமணி மீது குற்றம்சாட்டும் கீதாஜீவன்

0
167
geethajeevan

தூத்துக்குடி, நவ.26:

தரமற்ற எல்.இ.டி விளக்குகளால் தூத்துக்குடி மாநகரம் இருளில் முழ்கியுள்ளதில் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் தி.மு.க சார்பில் மாநகராட்சி அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று கீதாஜீவன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை: ”தூத்துக்குடி மாநகரிலுள்ள முக்கியமான மெயின் தெருக்களில் சோடியம் விளக்குகளும், குறுக்குதெருக்களில் குழல் விளக்குகளும் (டியூப்லைட்) பொருத்தப்பட்டு மாநகரப்பகுதிகள் வெளிச்சத்தில் இருந்து வந்தது.

இந்நிலையில், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி ஏற்பாட்டின்பேரில் ஏற்கனவே இருந்துவந்த சோடியம் விளக்குகளையும், குழல் விளக்குகளையும் மாற்றிவிட்டு மின்சாரத்தை சேமிக்கபோகிறோம் என்று சொல்லி அனைத்து மின்விளக்குகளையும் எல்.இ.டி விளக்குகளாக மாற்றிவிட்டனர். இந்த டெண்டரானது அமைச்சர் வேலுமணியின் உறவினருக்கே கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் இருந்த தெருவிளக்குகளை எல்லாம் எல்.இ.டி விளக்குகளாக மாற்ற டெண்டர் எடுத்தவர் மாட்டியுள்ள எல்.இ.டி விளக்குகள் அனைத்தும் தரம் குறைந்த போலியான விளக்குகள் ஆகும்.

இந்நிலையில், மாநகரின் பல்வேறு தெருக்களில் பொருத்தப்பட்டுள்ள எல்.இ.டி விளக்குகளில் பெரும்பாலான விளக்குகள் ஒரிரு நாட்களிலேயே எரியாமல் போய்விட்டது. இதனால் மாநகரின் பெரும்பாலான தெருக்கள் இருளில் மூழ்கியுள்ளது.

இதுதொடர்பாக, மாநகர அதிகாரிகளிடம் கேட்டால் தெருவிளக்கு அமைக்க டெண்டர் எடுத்த நிறுவனத்திற்கு ஓராண்டு பராமரிப்பும் சேர்ந்தே இருக்கிறது. எனவே, அந்த நிறுவனத்தினர் தான் பழுதடைந்த எல்.இ.டி விளக்குகளை மாற்றி கொடுக்கவேண்டும் என்கின்றனர்.

ஆனால், டெண்டர் எடுத்த சம்மந்தப்பட்ட நிறுவனமோ ஊரிலேயே இல்லை. இதனால் மாநகரம் இருளில் மூழ்கி கிடக்க பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊழல் ஒன்றே லட்சியம் என்று செயல்பட்டுவரும் அ.தி.மு.க அரசு செய்துவரும் ஊழல்களுக்கு இது ஒன்றே சான்றாகும்.

எனவே மாநகராட்சி கமிஷனர் இதில், உடனடியாக தலையிட்டு பழுதடைந்த அனைத்து எல்.இ.டி விளக்குகளையும் மாற்றி நல்ல தரமான எல்.இ.டி விளக்குகள் அமைத்து கொடுத்திடவேண்டும். இல்லாதபட்சத்தில் மாநகர தி.மு.க சார்பில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம்” என்று அதில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here