ஒரே நாடு ஒரே தேர்தல் : இந்தக் காலகட்டத்துக்கான தேவை! – பிரதமர் மோடி

0
112
modi

மக்களவைத் தேர்தல், அனைத்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் என அனைத்துக்கும் ஒரே வாக்காளர் பட்டியல் வேண்டும்.

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல், அனைத்து மாநில சட்டப்பேரவை தேர்தல்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் என தேர்தல்கள் தொடர்ந்து நடந்துகொண்டேயிருக்கும். இந்தநிலையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு கடந்த சில ஆண்டுகளாகவே, நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுடன் அனைத்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலையும், இதர தேர்தல்களையும் நடத்தலாம் என `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ யோசனையை வலியுறுத்திவருகிறது.

2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கான பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையிலும் `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் இடம்பெற்றிருக்கும். இந்தநிலையில் பிரதமர் மோடி, தற்போது மீண்டும் ஒரு முறை இந்தத் திட்டம் குறித்துப் பேசியிருக்கிறார். தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மத்தியில் காணொலிக் காட்சி மூலம் பேசிய பிரதமர் மோடி, “ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது வெறும் விவாதப் பொருள் அல்ல. அது இந்தக் காலகட்டத்துக்கான தேவை.

மக்களவைத் தேர்தல், அனைத்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சி அமைப்புகளுக்கானத் தேர்தல் என அனைத்துக்கும் ஒரே வாக்காளர் பட்டியல் வேண்டும். தனித்தனி பட்டியல் என்பது நேரத்தையும் வளங்களையும் வீணடிக்கும் செயல்” என்றார்.

தொடர்ந்து பேசியவர், `நாடு முழுவதும் ஏதேனும் ஒரு பகுதியில் அவ்வப்போது தேர்தல் நடந்துகொண்டுதான் இருக்கிறது. வளர்ச்சிப் பணிகளில் தேர்தல் ஏற்படுத்தும் தாக்கம் மிக அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே.ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறையை அமல்படுத்துவது தொடர்பாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். தேர்தல் நடத்தும் அதிகாரிகள் இது தொடர்பான ஆலோசனைகளை நடத்த வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் முறை வந்தால், அரசாங்கங்கள் தங்களது அதிகாரத்துக்கு உட்பட்ட நலத்திட்டங்களை மக்களுக்குத் தடை ஏதும் இன்றி கிடைக்கச் செய்ய முடியும்” என்றார்.

ஏற்கெனவே ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும், பிரதான எதிர்க்கட்சிகளிள் புறக்கணிப்பு காரணமாக அது அப்போது பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை. அதைத் தொடர்ந்து இப்போது பிரதமர் மீண்டும் இது குறித்துப் பேசியிருக்கிறார்.

தொடர்ந்து பீகார் தேர்தல் குறித்துப் பேசிய மோடி, “கொரோனா மாதிரியான பேரிடர் காலத்தில் சரியான திட்டமிடுதலுடன் தேர்தலை நடத்தியிருக்கிறோம். நமது அரசியல் சாசனம், 21-ம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளவும் உதவுகிறது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here