செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு – பொதுப்பணித்துறை திட்டமிட்டது எப்படி ?

0
25
sembarampakkam

2015-ம் ஆண்டு போல மீண்டும் ஒரு பேரழிவை சென்னை சந்திக்கப்போகிறதோ என்ற அச்சத்தை நிவர் புயல் ஏற்படுத்தியது. ஆனால், அப்படியான பாதிப்புகள் எதுவும் இப்போது ஏற்படவில்லை. இது எப்படிச் சாத்தியமானது?

2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வடகிழக்குப் பருவமழை காலத்தில் பெய்த பெருமழையின்போது, ஒட்டுமொத்த சென்னை மாநகரமும் வெள்ளத்தில் மூழ்கியது. தொடர்ந்து பெய்த பெருமழையால் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது. அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் அனுமதிக்காக அதிகாரிகள் காத்திருந்தனர்; அதனால், உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிடப்படாமல் மிகவும் தாமதமாகத் திறந்துவிடப்பட்டது; அதுதான், பெருவெள்ளத்தில் சென்னை மூழ்கியதற்குக் காரணம் என்று அப்போது செய்திகள் வெளியாகின.

போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதா உறங்கிக் கொண்டிருந்தார் என்றும், செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது பற்றிய தகவலை அவரிடம் தெரிவிப்பதற்கு அதிகாரிகள் தயங்கினர் என்றும் அப்போது சொல்லப்பட்டது. அதற்கு மேல் ஏரி தாங்காது என்ற சூழலில், செம்பரம்பாக்கத்திலிருந்து இரவோடு இரவாக 30,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதனால், அடையாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றங்கரையிலும் அதனையொட்டி பகுதிகளிலும் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பிறகு, ஒட்டுமொத்த சென்னையும் வெள்ளத்தில் மூழ்கியது. பலர் உயிரிழந்தனர். ஏராளமானோர் வீடு, வாசலை இழந்து வீதிக்கு வந்தனர். அது ஒரு பேரழிவாக மாறியது.

அதற்கடுத்து ஒவ்வோர் ஆண்டும் நவம்பர், டிசம்பர் வந்தாலே சென்னை மக்களுக்கு செம்பரம்பாக்கம் ஏரி நினைவுக்கு வந்துவிடும். மழை குறித்த அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுவிட்டால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்கள் அச்சத்துடனே இருப்பார்கள். இந்த ஆண்டு நிவர் புயல் பற்றிய அறிவிப்பு வெளியானதிலிருந்து, செம்பரம்பாக்கம் ஏரி குறித்து செய்திகள் ஊடகங்களில் தொடர்ந்து வெளிவந்தன. மக்கள் அச்சத்துடன் இருந்தனர். கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பியது.

நவம்பர் 25-ம் தேதி காலை 6 மணி நிலவரப்படி, 24 அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.55 அடியாக உயர்ந்தது. பாதுகாப்பு கருதி 1,000 கனஅடி தண்ணீரை பிற்பகல் 12 மணிக்குத் திறப்பதாக பொதுப்பணித்துறை அறிவித்தது. ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அடையாற்றையொட்டிய சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், ஈக்காட்டுத்தாங்கல், மணப்பாக்கம், ஜாபர்கான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

செம்பரம்பாக்கம் ஏரியில் 22 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்ததையடுத்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தொடர்ந்து கனமழை பெய்ததால் கூடுதல் தண்ணீரைத் திறக்க வேண்டுமென்பதால், உயர்ந்துவரும் நீர்மட்டத்தைக் கண்காணிப்பதற்காக பொதுப்பணித்துறையின் தலைமைப்பொறியாளர் அசோகன், கண்காணிப்பு பொறியாளர் முத்தையா உள்ளிட்டோர் செம்பரம்பாக்கம் ஏரி அலுவலகத்தில் இரவு முழுவதும் தங்கியிருந்தனர். இவ்வளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை.

இது குறித்து தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் உயர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “ஸ்ரீபெரும்புதூர் ஏரி, பிள்ளைப்பாக்கம் ஏரி, நேமம் ஏரி என ஒரு சங்கிலித் தொடரைப் போல, பல ஏரிகளிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்குத் தண்ணீர் வருகிறது. நிவர் புயல், கனமழை குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்து இந்த ஏரிகளின் தண்ணீர் அளவுகளையும் செம்பரம்பாக்கம் ஏரியின் தண்ணீர் அளவையும் தொடர்ந்து கண்காணித்துவந்தோம்.

அத்துடன், வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது தெரிவித்துவந்த தகவல்களையும் ஆய்வுசெய்தோம். 10 செ.மீ மழை பெய்தால் ஏரிக்கு எவ்வளவு தண்ணீர் வரும், 100 செ.மீ மழை பெய்தால் ஏரிக்கு எவ்வளவு தண்ணீர் வரும், அதன் மூலம் எவ்வளவு நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும் என்பது போன்ற பல கணக்கீடுகளை முன்கூட்டியே தயாரித்து வைத்திருந்தோம். மேலும், அடையாறுக்கு செம்பரம்பாக்கத்திலிருந்து மட்டுமே தண்ணீர் வருவது கிடையாது. மற்ற இடங்களில் பெய்கிற மழைநீரும் சேர்ந்துவரும். நந்தம்பாக்கத்தில் ஒரு சிறிய நீர்த்தேக்கம் இருக்கிறது. அங்கு இருக்கும் தண்ணீரைப் பொதுப்பணித்துறை சார்பில் அளவீடு செய்வோம். அப்போதுதான், அடையாறில் எவ்வளவு நீர் செல்லும் என்பதைக் கணக்கிட முடியும். இதுபோக, அடையாறின் முகத்துவாரத்தை முன்கூட்டியே தூர்வாரி வைத்திருந்தோம். இரண்டு எந்திரங்களை முன்கூட்டியே அங்கு தயார் நிலையில் வைத்திருந்தோம்.

செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 22 அடி நிரம்பிவிட்டால், தண்ணீரைத் திறக்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. மழை நன்றாகப் பெய்யும் என்பது முன்கூட்டியே தெரிந்துவிட்டதால், 22 அடி நிரம்புவதற்கு முன்பாகவே தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவிட்டோம். இரவு நேரத்தில் தண்ணீரைத் திறந்துவிடக் கூடாது என்ற முக்கியமான முடிவை நாங்கள் எடுத்திருந்தோம். 2015-ம் ஆண்டு இரவில் தண்ணீர் திறந்துவிட்ட பிறகுதான் பெரும் பிரச்னை ஏற்பட்டது.

எனவே, இப்போது இரவில் ஏரியைத் திறந்தால் மக்கள் அச்சப்படுவார்கள் என்பதால், பகலில் திறப்பது என்று முடிவுசெய்தோம். மதியம் ஏரியைத் திறக்கப்போகிறோம் என்கிற அறிவிப்பை காலையில் வெளியிட்டோம். அது, காவல்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பிற நடவடிக்கைகளை எடுப்பதற்கு வசதியாக இருந்தது.1,000, 1,500 என்று தொடங்கி 30,000 வரை போகும். இதுதான் அடையாறில் பிரச்னை வராததற்கு முக்கியக் காரணம்” என்றார்.

தலைமைச்செயலகத்தில் உயரதிகாரி ஒருவரிடம் நாம் பேசியபோது, “செம்பரம்பாக்கம் ஏரியின் நிலை குறித்து தலைமைச்செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார். முதல்வரிடம் காலையில் தெரிவித்துவிட்டுத்தான், ஏரி திறப்பு பற்றிய அறிவிப்பை அதிகாரிகள் வெளியிட்டனர். பிறகு, செம்பரம்பாக்கம் ஏரியை நேரடியாகப் பார்வையிட வேண்டும் என்று திடீரென முடிவெடுத்து, முதல்வர் அங்கு சென்றார். ஏரியின் அப்போதைய நிலவரம் குறித்து அங்கிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார்” என்றார்.

2015-ல் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பிய நேரத்தில் போயஸ் கார்டனில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார், அன்றைய முதல்வர் ஜெயலலிதா. அதன் மோசமான விளைவுகளை சென்னை மக்கள் அனுபவித்தனர். இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, கொட்டும் மழையில் குடையை எடுத்துக்கொண்டு செம்பரம்பாக்கம் ஏரிக்கு விசிட் அடித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here