திருச்செந்தூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பஞ்சாயத்து பெண் ஊழியர் பலி – உறவினர் சாலை மறியல் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

0
193
crime

திருச்செந்தூர் அருகே ரோட்டில் நடந்து சென்ற துப்புரவு தினக்கூலி பணியாளர் பெண்கள் இருவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிற்காமல் சென்றது. இதில் பலியான பெண்ணின் உடலை நீண்ட தூரம் இழுத்து சென்றதால் உடல் சீர்குலைந்தது. மற்றொரு பெண் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்தை கண்டித்தும் அவரது உறவினர்கள் ஒன்றரை மணிநேரம் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டணம் முத்துநகரைச் சேர்ந்தவர் முனியசாமி. இவர் திருச்செந்தூர் முருகன் கோயிலில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கோமதி(46). இதே ஊரைச் சேர்ந்த மூக்காண்டி மனைவி மனைவி ஜெயலட்சுமி(36). இவர்கள் இருவரும் வீரபாண்டியன்பட்டணம் ரூரல் பஞ்சாயத்தில் தினக்கூலி அடிப்படையில் துப்பரவு பணியாளராக வேலை பார்த்து வருகின்றனர்.

இன்று காலை 8.30 மணியளவில் கோமதியும், ஜெயலட்சுமியும் வீட்டிலிருந்து பிலோமிநகரில் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு நடந்து சென்றனர். செல்லம் வழியில் இசக்கியம்மன் கோயில் அருகில் சென்றனர். அப்போது பின்னால் வந்த மீன் ஏற்றக்கூடிய பொலிரோ பிக் அப் வேன் இருவர் மீது மோதி நிற்காமல் சென்றது. இதில் கோமதியின் சேலை வேனில் சிக்கியது. இதனால் அவரது உடலை அரைபர்லாங் தூரத்திற்கு இழுத்து சென்றது. இதில் அவரது உடல் தரையில் உரசி சென்றதால் சீர்குலைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். ஜெயலட்சுமி படுகாயமடைந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் திருச்செந்தூர் கோயில் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ரஞ்சித்குமார், சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்துவிசாரணை நடத்தினர். படுகாயமைடந்த ஜெயலட்சுமி பலத்த காயத்துடன் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டார். இதற்கிடையே கோமதி உடல் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வெளியூரிலிருந்து அவரது உறவினர்கள் குவிந்தனர். இதற்கிடையே மாலை 4 மணி வரை மோதிய வாகனத்தை அடையாளம் காண்பதில் தாமதம் ஏற்பட்டது.

இதனால் மோதி நிற்காமல் சென்ற வேன் டிரைவரை கைது செய்ய வேண்டும். இறந்த போன கோமதியின் குடும்பத்தினருக்கு வேலை வழங்க வேண்டும். அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கேட்டு அவரது உறவினர்கள் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் திருச்செந்தூர் – திருநெல்வேலி சந்திப்பு ரோட்டில் அரசு ஆஸ்பத்திரி அருகில் மெயின்ரோட்டில் உட்கார்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் மறியல் நடந்த இடம் நான்கு முக்கு சந்திப்பு என்பதால் கடுமையான போக்குவரத்த நெரிசல் ஏற்பட்டது. மேலும் பள்ளி வாகனங்களும் அங்கிருந்து மேலும் நகர முடியாமல் தவித்தன.

மறியல் போராட்டம் நடத்தியவர்களிடம் திருச்செந்தூர் போலீஸ் டி.எஸ்.பி. பாரத், கோயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார், இன்ஸ்பெக்டர் ரவிகுமார், வருவாய் துறை சார்பில் துணை தாசில்தார் கோபால், வருவாய் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், வி.ஏ.ஒ., கணேசபெருமாள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேர பேச்சுவார்த்தை பின்னர் மறியல் போராட்டத்தை கைவிட போராட்டகாரர்கள் சம்மதித்தனர்.

இதனை தொடர்ந்து 4.15 மணி துவங்கிய மறியல் போராட்டம் 5.45 மணிக்கு முடிவடைந்தது. சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யாவிட்டால் பிரேத பரிசோதனை முடித்து உடலை வாங்க மாட்டோம் என உறுவினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதனால் திருச்செந்தூரில் சுமார் ஒன்றை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here