திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு கடற்கரையில் நேற்று இரவு சொக்கப்பனையில் தீபம் ஏற்றப்பட்டது. நிகழ்ச்சியில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனை நடந்தது. மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடந்தது. காலை முதல் மாலை 6 மணி வரை சுவாமி தரிசனத்திற்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மாலையில் கோயில் கடற்கரையில் சொக்கப்பனையில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.
மாலையில் கோயில் சண்முகவிலாச மண்டபத்தில் நாரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, இரவு 7 மணிக்கு கோயில் கடற்கரையில் சொக்கப்பனையில் தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக சொக்கபனை நிகழ்ச்சியில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
ஏற்பாடுகளை கோவில் தக்கார் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். திருச்செந்தூர் ஏ.எஸ்.பி. ஹர்ஷ்சிங் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர்.