புயலால் தமிழக மக்கள் பாதிக்காமல் இருக்க தாமிரபரணியில் தியான வழிபாடு

0
139
sithar

தென்கிழக்கு வங்ககடலில் நிலை கொண்டுள்ள புதிய புயலால் தமிழக மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும், வரும் காலங்களில் இயற்கை பேரிடர்கள் இல்லாத நிலை வேண்டியும் தூத்துக்குடி ‘சாக்தஸ்ரீ’ சற்குரு சீனிவாச சித்தர் ‘தாமிரபரணி நதி’யில் 12மணி நேர சிறப்பு தியான வழிபாடு செய்தார்.

ஆன்மிக சிறப்புபெற்ற தென் தமிழகத்தின் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி நதியில் புனித நீராடி நதித்தாயை வணங்கினால் வேண்டும் வரம் கிட்டும் என்பது ஐதீகமாகும்.

இந்நிலையில், தற்போது தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ள நிலையில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த வாரம் கரையை கடந்த ‘நிவர் புயல்’ தாக்குதலில் இருந்து தமிழக மக்கள் மீள்வதற்குள் மற்றொரு புயல் உருவாகியுள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த புதிய புயல் எந்தவித பாதிப்புகளும் இல்லாமலும், புயல் காரணமாக உருவாகியுள்ள பெரு மழையும் எந்தவித பாதிப்புகளும் இல்லாத வகையில் கரை கடந்திடவும் வேண்டி தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-மஹா காலபைரவர் சித்தர் பீடத்தின் சுவாமிகள் ‘சாக்தஸ்ரீ’ சற்குரு சீனிவாச சித்தர் தாமிரபரணி நதியில் புனித நீராடி தியான வழிபாடு செய்தார்.

12மணி நேர சிறப்பு வழிபாடுகளை முன்னிட்டு ‘சாக்தஸ்ரீ’ சற்குரு சீனிவாச சித்தர் தாமிரபரணியில் புனித நீராடி, புனித நதியான தாமிரபரணி நதிதாய்க்கு மஞ்சள், பால், பன்னீர், இளநீர், தேன், குங்குமம் உள்ளிட்ட 16வகையான அபிஷேகங்களை செய்து சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் சுவாமிகள் வழிபட்டார். அதனைத்தொடர்ந்து தாமிரபரணி நதியில் அமர்ந்து ஜெபமந்திரங்களை உச்சாடணம் செய்து சிறப்பு தியானத்துடன் கூடிய சிறப்பு வழிபாடுகளையும் செய்தார்.

சிறப்பு தியான வழிபாடுகளை தொடர்ந்து, ‘சாக்தஸ்ரீ’ சற்குரு சீனிவாச சித்தர் கூறியதாவது, தற்போதுள்ள இக்கட்டான காலகட்டத்தில் புதியதாக உருவாகியுள்ள புயலால் எந்த மக்களுக்கும் எவ்வித பாதிப்புகள் ஏற்படாதிருக்கவேண்டியும், வரும் காலங்களில் இயற்கை பேரிடர்கள் இல்லாத நிலை வேண்டியும், பக்தர்கள் அனைவரும் கடன் தொல்லை, நோய்கள் இன்றி நலமாக வாழ்ந்திடவும் வேண்டி இந்த சிறப்பு தியான வழிபாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here