தூத்துக்குடியில் மழையில் நனைந்தபடி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஆர்ப்பாட்டம் – குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு

0
210
thoothukudi

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் சந்திப்பில் இன்று 17.12.2019 மாலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சம்சுதீன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அஸாருதீன், மாவட்ட பொருளாளர் நாசர், துணைத்தலைவர் தமீம்அன்சார், துணை செயலாளர்கள் இமாம்பரீது, சிக்கந்தர், ஹஸன் சைபுதீன், மருத்துவ அணி செயலாளர் ரஷீத்காமில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், மாநில பேச்சாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்து நிறைவேற்றியிருப்பது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும். மதங்களின் அடிப்படையில் மக்களை பிளபுபடுத்தக்கூடாது என அரசியல் சாசனத்தில் உள்ளது. இந்த சட்ட திருத்தத்தின் மூலமாக நாட்டுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப்போவது இல்லை.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளாக வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதே மசோதாவின் நோக்கம் என மத்திய அரசு சொல்கிறது. அதில் முஸ்லிம்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை மறுக்கப்பட்டு இருப்பது எந்த வகையில் நியாயம், முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் போக்கு நாட்டை மதரீதியில் பிளவுபடுத்தும் செயலாகும்.

பொருளாதார வீழ்ச்சியில் இந்தியா சிக்கித்தவிக்கிறது. ஜி.எஸ்.டி. போன்ற வரிகளால் வணிகநிறுவனங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. பாலியல் வன்முறைகளால் உலக அரங்கில் பெண்கள் வாழ தகுதியற்ற நாடாக இந்தியா திகழ்கிறது. வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யும் அவலம் முடிவில்லாமல் தொடர்கிறது. இதுபோன்ற பிரச்சனைகளில் நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்கவேண்டிய மத்திய அரசு அதைப்பற்றி எல்லாம் கவலைகொள்ளாமல் மக்களை பிளபுபடுத்தும் இதுபோன்ற தேவையற்ற சட்டங்களை இயற்றுவதன் மூலமாக ஏழை மக்களின் பிரச்சனைகள் ஒருபோதும் தீர்ந்து விடப்போவது இல்லை.

நாட்டின் வளத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதன் மூலமாக விலைவாசி உயர்வு கட்டுக்குள் இல்லாமல் ஏழை, எளியமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதே மத்திய அரசின் தற்போதைய சாதனையாக இருந்து வருகிறது. ஹிட்லர் போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு இனியாவது கைவிடவேண்டும், இல்லை என்றால் எங்களின் போராட்டங்கள் தொடரும் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் தங்களின் கைக்குழந்தைகளுடன் அணிதிரண்டு வந்து பங்கேற்றனர். ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது திடீரென்று மழை பெய்தபோதும், ஆர்ப்பாட்டத்தில் நின்ற நிர்வாகிகள் மற்றும் குழந்தைகள், பெண்கள் கலைந்துசெல்லாமல் அப்படியே மழையில் நனைந்தபடி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினரை தூத்துக்குடி டவுன் டி.எஸ்.பி., பிரகாஷ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். தடையை மீறி நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம் காரணமாக ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

போலீசார் கைது செய்த நேரத்தில், குழந்தைகளுடன் வந்த பெண்கள் வேண்டுமானால் இங்கிருந்து செல்லலாம் என்று ஜமாஅத் நிர்வாகிகளிடம் போலீசார் கூறினர். ஆனால் ஜமாஅத் நிர்வாகிகள் நாங்கள் அனைவரும் கைதாகுவோம் என்று உறுதிபட தெரிவித்து விட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு நிலவியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here