தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.48 லட்சம் மதிப்பில் 6ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் கொள்கலன்

0
146
minister news

தூத்துக்குடி, டிச.23:

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.48 லட்சம் மதிப்பில் 6ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் கொள்கலனை அமைச்சர் கடம்பூர்ராஜூ தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.48 லட்சம் மதிப்பில் 6ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் கொள்கலன் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவிலுள்ள நோயாளிகளை கண்காணிக்கும் நவீன தொலை கண்காணிப்பு கருவி ஆகியவை புதியதாக அமைக்கப்பட்டுள்ளது.

இதன் தொடக்கவிழா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு, கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., சின்னப்பன் எம்.எல்.ஏ-., ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி வரவேற்றார். விழாவில், அமைச்சர் கடம்பூர்ராஜூ கலந்துகொண்டு, புதிய கருவிகளை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பேர் உள்நோயாளிகள், வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இதய நோயாளிகள் அதிகம் இருப்பதனால் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது. ஏற்கனவே மருத்துவமனையில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் வழங்கும் கொள்கலன் நிறுவப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஜன் கொள்கலனை நிறுவவேண்டும் என மருத்துவமனை மற்றும் நோயாளிகள் தரப்பில் கோரிக்கை எழுப்பப்பட்டது.

அதன் அடிப்படையில் தமிழக சுகாதாரத் துறையின் மூலமாக ரூ.48லட்சம் மதிப்பில் இம்மருத்துவமனையில் புதிதாக 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் கொள்கலன் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதுபோன்று மருத்துவமனையிலுள்ள நோயாளிகளை மருத்துவக்கல்லூரி முதல்வர் அறையில் இருந்தே கண்காணிப்பதற்கு வசதியாக நவீன தொலை கண்காணிப்பு கருவியும் நிறுவப்பட்டுள்ளது. என்றார்.

இதில், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மருத்துவமனை கண்காணிப்பாளர் பாவலன், துணை மருத்துவ கண்காணிப்பாளர் குமரன், மயக்கவியல் பிரிவு தலைமை மருத்துவர் பலராம் மற்றும் மருத்துவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here