திருநெல்வேலின்னா அல்வா.. தூத்துக்குடின்னா மக்ரூன்..!

0
37
mucroon

திருநெல்வேலி பெயரை சொன்னாலே அல்வா நினைவுக்கு வருவதுபோல் தூத்துக்குடி என்றாலே மக்ரூன்தான் நினவுக்கு வரும். அப்படித்தான் தூத்துக்குடி மக்களை அடையாளம் காட்டுகிறது மக்ரூன்.

தூத்துக்குடியிலிருந்து கிளம்பி உறவினர்கள் வீட்டிற்கு வரும் நண்பர்கள் வாங்கிவரும் இனிப்பு பண்டங்களில் தவறாமல் இடம் பிடிப்பது மக்ரூன். வெள்ளை வெளீரென கூம்பு வடிவத்தில் வாயில் போட்டதும் கரையும் மக்ரூனுக்கு அடிமையாகாதவர் இருக்க முடியாது.

போர்ச்சுக்கீசியர்கள் கடல் வாணிபம் செய்வதற்காக தூத்துக்குடிப் பகுதியில் குடியேறிய போது அவர்களின் உணவு வகைகளில் எடுத்துக் கொண்ட ஒருவகை இனிப்பு பண்டம்தான் மக்ரூன். போர்சுக்கீசிய மொழியில் ’மக்ரூன்’ என்றால், ‘முட்டையும் முந்திரியும் கலந்த இனிப்பு’ என்று பொருள். அவர்களின் குடியிருப்புகளில் வேலைக்காரர்களாக பணியமர்த்தப்பட்டவர்கள், இந்தப் பண்டத்தை செய்யக் கற்றுக் கொண்டதால்தான் தூத்துக்குடியில் பிரசித்தமானாதாகச் சொல்லப்படுகிறது.

வாயில் போட்டவுடன் கரையும் தன்மைக்கும், மொறு மொறுப்புக்கும் குறைந்த வெப்பநிலையில் அதிக நேரம் பேக் (வேக வைத்தல்) செய்வதும், கையாளும் முறையுமே இதன் பிரத்யேக சுவைக்கு காரணம். முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் எடுத்துக் கொண்டு, அதனுடன் சீனி கலந்து நன்றாக அடித்துக் கலக்கி கிரீம் பதம் வந்ததும் அதனுடன் பொடித்த முந்திரியும் கலந்து கோன் வடிவத்தில் சுற்றப்பட்ட பட்டர் பேப்பரில் கலவையை இட்டு, கூம்பு வடிவத்தில் வடித்து பேக் செய்ய வேண்டும். முட்டையை அடிப்பதும் சரியான பக்குவத்தில் சீனியைக் கலப்பதும், கலந்த கலவை, கிரீம் பதத்தில் இருந்தால் மட்டுமே மக்ரூன் நன்றாக வரும். இல்லாவிட்டால் வடிவமும், சுவையும் மாறிவிடும்.

மக்ரூனில் முட்டை கலந்திருப்பதால் ஒரு மாதத்தைக் கடந்து பயன்படுத்த முடியாது என்பதால், ’பேபி மக்ரூன்’ என்ற பெயரில் மக்ரூனின் வடிவத்தை சிறியதாக்கி அலுமினிய பேக்கிங் பேப்பரில் பேக்கிங் செய்து 6 மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்த முடியும் வகையில் பிரத்யேகமாக பேக்கிங் செய்து ஏற்றுமதி செய்து வருகிறது தூத்துக்குடி அபி மக்ரூன்ஸ் நிறுவனம். கத்தார், ஓமன், அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here