வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் ”தூத்துக்குடி உப்பு”!

0
194
salt news

தூத்துக்குடி மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. உப்பில்.., பருமணி (கல் உப்பு), சிறுமணி (பொடி உப்பு), தூள் உப்பு (தூளாக்கியது) என மூன்று வகைகள் உள்ளன. இதில், ’சிறுமணி’ என்ற வகை பொடி உப்பு இயற்கையாகவே இங்கு அதிகமாக விளைவதாலும், அதிக வெண்மை நிறம் உடையது என்பதாலும் தூத்துக்குடி உப்பிற்கு தனி மவுசு உண்டு.

இந்தியாவில் குஜராத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடியில்தான் உப்பு அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் சராசரியாக ஒரு ஆண்டுக்கு 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 22 லட்சம் டன் வரை உற்பத்தி நடைபெறுகிறது. இத்தொழிலில் நேரடியாக 25 ஆயிரம் தொழிலாளர்களும், மறைமுகமாக 25 ஆயிரம் தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஆண்களை விட பெண் தொழிலாளர்களே அதிகம். தற்போது பருமணி உப்பாகவே எடுத்து, அதை Free flow பிளாண்ட்டுகளில் சிறிய துகள்களாக நொறுக்கி Free flow உப்பாக (சீனி பதம்) மாற்றி விற்பனைக்கு அனுப்பி வருகிறார்கள்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இலங்கை, மலேசியா, இந்தோனேஷியா, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு கப்பல்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பரில் உப்பளங்களில் தெப்பம், பாத்திகளைத் தயார் செய்வார்கள். இதை ’செய்னத் வேலை’ எனச் சொல்கிறார்கள். ஜனவரி முதல் செப்டம்பர் வரை உப்பு உற்பத்தி அதிகமாக நடைபெறுகிறது. மழைக்காலங்களில் உப்பு உற்பத்தி நடைபெறாது. உப்பளத்தின் இடம், பரப்பளவைப் பொறுத்து தெப்பம், பாத்திகளை அமைப்பார்கள். ’தெப்பம்’ என்பது படிப்படியாக தாழ்வாக இருக்கும். முதல் தெப்பத்தில் விடும் தண்ணீர், அடுத்தடுத்த தெப்பத்தில் நிரம்பி இறங்கி வரும். அதிக பட்சமாக 10 அடுக்குகள் வரை இருக்கும்.

உப்பு உற்பத்திக்கு பெரும்பாலும் போர் தண்ணீரே பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக 6 முதல் 7 டிகிரி அடர்த்தியில் இருக்கும் தண்ணீர், தெப்பத்தில் 24 டிகிரி வரும் வரை (வெயிலைப் பொறுத்து) 8 முதல் 10 நாட்கள் தேக்கி வைக்கப்படும். அதற்குப் பின்னர், பாத்திகளுக்கு திறந்து விடப்படும். பாத்தியில் விடும் போதே, தண்ணீரில் உப்பு ஆடை மிதக்கும். வெயில் மற்றும் காற்றில் உப்பு விளையும். பாத்தியில் விட்ட மறுநாளில் இருந்து தினமும் காலையில் கோட்டுப் பலகையால் கோடு போடுவார்கள். இதனால், உப்பு கெட்டிப் படாமல் விளையும்.

7 முதல் 15 நாட்களில் உப்பை வாறி, குடோனில் குவித்து சேமிக்கிறார்கள். பாத்தியில் தண்ணீர் அதிகம் கட்டினால் உப்பு பருமணியாக (15 நாட்கள்) விளையும். தண்ணீர் குறைவாக கட்டினால் சிறுமணியாக (7 நாட்கள்) விளையும். தேவையைப் பொறுத்து பருமணி, சிறுமணி, தூள் உப்பு… என பேக்கிங் செய்து விற்பனைக்கு அனுப்புவார்கள். தற்போதைய நிலையில், தரமான ஒரு டன் பருமணி உப்பு ரூ.1,200-க்கும், சிறுமணி உப்பு ரூ.1,500-க்கும், தூள் உப்பு ரூ.1,800-க்கும், Free Flow உப்பு ரூ.2,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உற்பத்திக்கு ஏற்ப விலைகளில் ஏற்ற, இறக்கம் உண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here