முதல்வர் எங்கேயும் பேச முடியாது – பொறுப்புள்ள எதிர்கட்சித் தலைவர் இப்படி பேசக் கூடாது

0
148
dmk news

தமிழக முதல்வர் எங்கேயும் பேச முடியாத சூழ்நிலை வரும் என்கிற அர்த்ததில், பொறுப்புள்ள எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்க கூடாது.

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட தேவராயபுரம் பகுதியில் திமுக சார்பில் மக்கள் கிராமசபைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்தார். அமைச்சர் வேலுமணியின் உள்ளாட்சித் துறையில் ஊழல் என்பது குறித்து பேசினார்.

அதன்பிறகு பொதுமக்களிடம் அவர் குறைகளை கேட்டார். அப்போது முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு பெண் எழுந்து ஸ்டாலினிடம் கேள்வி கேட்க முயன்றார். அப்போது ஸ்டாலின், ‘நீங்கள் யார்..எந்த ஊர்..?எனக் கேட்க, அந்தப் பெண், ‘இதுவே தெரியாமல் எதற்கு வந்தீர்கள்..எதற்காக கிராம சபைக் கூட்டம் நடத்துகிறீர்கள்.. கொரோனா காலத்தில் நீங்கள் எங்கே போனீங்க..? என்று ஆக்ரோஷமாக கேட்டார். இதை பார்த்த திமுக தொண்டர்கள் அந்த பெண்ணிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின், ’மேடம்..உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியாது. அமைச்சர் வேலுமணி அனுப்பின ஆளு நீங்க.’ என்றவர் ‘போலீஸைக் கூப்பிடுங்க.அவங்களை வெளியில் அனுப்புங்க’ என்றார். போலீஸார் அந்த பெண்ணை வெளியேறினர்.

வெளியேறியபோது அந்த பெண், ஸ்டாலின் ஒழிக..’ என்று கோஷம் போட்டார். அந்த பகுதியில் நின்றே அமைச்சர் வேலுமணியிடம் செல்போனில் பேசினார். அவர் குனியமுத்தூர் அருகே செந்தமிழ்நகரை சேர்ந்த பூங்கொடி என்றும் அவர் அதிமுக தெற்குமாவட்ட மகளிரணி துணைத் தலைவர் என்றும் தெரியவந்தது.

அந்தபெண் வெளியேறிய பிறகு பேசிய மு.க.ஸ்டாலின், ‘’மிஸ்டர் வேலுஅணி அவர்களே..ஊழல்மணி அவர்களே..இதோடு உங்க கொட்டத்தை அடக்குங்கள். இது தொடர்ந்தால் நீங்கள் மட்டுமல்ல.. உங்கள் முதலமைச்சரும் எங்கேயும் பேசமுடியாது. இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அதுதான் மரியாதை. தைரியம் இருந்தால் அந்த பெண் அதிமுக என்று சொல்லி உட்கார வேண்டியதுதானே..எதற்காக திமுக தொப்பியை அணிந்து கொண்டு உட்கார வேண்டும்?’’ என்றார்.

இதற்கிடையே தொண்டாமுத்தூர் பகுதியில் அதிமுகவினர் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் திமுகவினரும் அங்கு வந்தனர். போலீஸார் அவர்களை அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இந்த செய்தியிலிருந்து நாம் சொல்லிக் கொள்வது..?

பொதுவாக மக்கள் கிராமசபை கூட்டம் என்றால், கிராம மக்களை கூட்டி அவர்களிடம் நிறை,குறைகளை கேட்பது என்பதுதான் அதற்கு பொருள். அந்த வகையில் கூடியிருக்கும் மக்கள் எந்த கட்சியை சேர்ந்தவராகவும் இருக்கலாம். அவர்கள் கேட்கும் கேள்விக்கு உரிய பதில் சொல்வதே அங்கு தலைமை வகிப்போரின் கடமை. ஆனால் அரசியல் கட்சியினர் நடத்தும் கிராம சபை கூட்டத்தில் அவர்களின் கட்சியினரும் அவர்களுக்கு ஆதரவாக இருப்போரும் கூடுவதாக பழகிபோய்விட்டது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு கட்சியினர் சார்பில் நடத்தும் கூட்டத்திற்கு மாற்றுக்கட்சியை சார்ந்தவர்கள் செல்லாமல் இருப்பதுதான் சரியான நிலையாகும்.

அங்கு தனது கட்சித் தலைமையை அல்லது கட்சி விசுவாசிகளை கடுமையாக சாடுகிறார்கள் என்று கொதிப்பதும் அவ்வளவுபொறுத்தமான நடவடிக்கை இல்லை. அரசியல் கட்சி என்றாலே அடுத்த கட்சியை சாடுவதற்காகத்தான் கூட்டமே நடத்துவதுபோலுள்ளது. அந்த இடத்தில் நானும் மக்களில் ஒருவர்தான் என்று சொல்லிக் கொண்டு மாற்றுக் கட்சியினரின் அந்த கூட்டத்தில் கலந்து கொள்வது நியாயப்படி சரியென்றாலும் இக்கால அரசியல் சூழ்நிலைக்கு அது சரிகிடையாது. அதன் பின் விளைவுகளை சந்தித்தே ஆகவேண்டும்.

சரி., மாற்றுக் கட்சியை சேர்ந்த ஒருவர் தன்னுடைய கூட்டத்துக்குள் நுழைந்து கேள்வி கேட்கிறார் என்றால் அதை ஒரு வாய்ப்பாக நினைத்து கண்டபடி திட்ட கூடாது. நல்ல வாய்பாக நினைத்து அவரிடமே நீங்கள் கேள்வி கேட்டிருக்கலாம்? நீங்கள் குற்றம் சாட்டி வரும் அத்தனை கேள்விக்கும் அவரிடம் பதில் கேட்டு அவரை மடக்கி வெளியேற்றியிருக்கலாம்.

பிரச்னை வேண்டாம் என உடனே நீங்கள் அவரை வெளியேற்றியது ஒரு வகைக்கு சரிதான் என்றாலும், மிஸ்டர் வேலுஅணி அவர்களே..ஊழல்மணி அவர்களே..இதோடு உங்க கொட்டத்தை அடக்குங்கள் என்று சொன்னீர்கள். அதுவும் பரவாயில்லை. அதனைத் தொடர்ந்து ‘’இது தொடர்ந்தால் நீங்கள் மட்டுமல்ல.. உங்கள் முதலமைச்சரும் எங்கேயும் பேசமுடியாது’’ என்று சொன்னீர்களே அதுதான் தவறான வார்த்தை.

உங்களுக்கு பழகிப்போய்விட்டது. அரசியல் பேசி பேசி எல்லாமே அரசியலாக. ஆனால் அரசு என்பதும் அரசு நிர்வாகம் என்பதும் அவற்றை நிர்வகிப்பது என்பதும் கட்டுக் கோப்பாக இருக்க வேண்டியது. அதை தகர்க்கும் வகையில் பொறுப்புள்ள அரசியல் பிரமுகரகள் பேசக் கூடாது. ஒரு முதல்வரை கூட்டங்களில் பேச முடியாத சூழ்நிலை ஏற்படும் என்று பேசுவது வெறும் எடப்பாடி பழனிச்சாமியை சொல்வதாக எடுத்துக் கொள்ளமுடியாது. தமிழ்நாட்டின் முதல்வர் அவர். அவரை கூட்டம் நடத்தவிடாதபடி நிலை ஏற்படும் என்று நீங்கள் சொல்வது பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துவோம் என்று சொல்வற்கு சமம். எனவே உங்களுக்கு தெரிந்த அதிமுக இணை ஒருங்கிணைபாளரை எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யுங்கள். அது உங்கள் இரு தரப்புக்கும் இடையிலான அரசியல் யுத்தமாக இருந்துவிட்டு போகட்டும்.

ஆனால் தமிழக முதல்வர் என்கிற வகையில் அந்த பதவியில் உள்ளவரை மிரட்டும் வகையில் பேசுவது அவ்வளவு முறையான வார்த்தை இல்லை. இந்த பேச்சை கேட்டு முதல்வரின் கூட்டங்களில் சிலர் இடையூறு செய்தால் எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டும் இழுக்கு அல்ல. தமிழகத்திற்கும் சேர்த்துதான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த கருத்து யாரையும் ஆதரிக்கவோ எதிர்க்கவோ அல்ல..எதிர் கால தமிழக நலனுக்காகவே..

-நடுநிலை.காம் ஆர்.எஸ்.சரவணப்பெருமாள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here