எட்டையபுரம்,ஜன.06:
எட்டயபுரம் அருகே பாத யாத்திரை பக்தர்கள் மீது லாரி மோதியதில் 12 வயது சிறுவன் உட்பட 2பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள மேல ஈரால் கிராமத்தைச் சேர்ந்த அழகப்பன் என்பவர் தலைமையில் சுமார் 25 பக்தர்கள் பாத யாத்திரையாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று இரவு 7 மணியளவில் புறப்பட்டுள்ளனர். இவர்கள் இரவு 10.45 மணியவில் தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில், எப்போதும்வென்றான் பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, திருப்பூரில் இருந்து தூத்துக்குடி நோ்ககி வந்த லாரி பாதயாத்திரை பக்தர்கள் மீது மோதியது. இதில் மேல ஈரால் கிராமம் வடக்குத் தெருவைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் மகேஷ் குமார் (12) என்ற சிறுவனும், பண்டாரம் மகன் குமார் (33) என்பவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவ்விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் பலியான இருவரது உடல்களும் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து எப்போதும்வென்றான் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) கலா வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் சம்பவ இடத்தை விளாத்திகுளம் டிஎஸ்பி பாஸ்கரன் பார்வையிட்டார். லாரி மோதி பாதயாத்திரை பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.