இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள கொல்லம்பரம்பு கிராமம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் மாசிலாமணி மகன் அசோக் குமார் (50), லாரி டிரைவர். நேற்று மாலையில் தூத்துக்குடி – எட்டயபுரம் ரோட்டில் உள்ள லாரி செட்டில் லாரியை நிறுத்திவிட்டு, பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் அருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் பைக், இவரது பைக் மீது மோதியது.
இவ்விபத்தில் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டு, அசோக் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மற்றொரு பைக்கை ஓட்டி வந்த காட்டுநாயக்கன் பட்டியைச் சேர்ந்த காசிராஜன் மகன் விஜய் (20), பின்னால் அமர்ந்திருந்த சண்முககனி மகன் ராஜலிங்கம் (20) ஆகிய 2பேரும் படுகாயம் அடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து புதியம்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்து சுப்பிரமணியன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.