நம்ம ஊர் பொங்கல் விழா என்கிற தலைப்பில் தமிழகம் முழுவதிலும் பாஜக சார்பில் பொங்கல் விழா நடத்தப்பட்டு வருகிறது. அதுபோல் இன்று மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகே பொங்கல் விழா நடந்தது. அதில் பாஜக செய்தி தொடர்பாளர் குஷ்பு கலந்து கொண்டார்.
அங்கு நடத்தப்பட்ட கிராமியக் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, ‘’தமிழகத்தில் பாஜக எங்கே இருக்கிறது என்று கடந்த வருஷம் வரை கேட்டார்கள். ஆனால் தற்போது தமிழகத்தில் பாஜக கொடியில்லாத இடமே இல்லை. தமிழகத்தில் பாஜக விரைவாக வளர்ந்து வருகிறது. அதுக்காக யாரும் குரல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. பிரதமர் மோடி ஒருவர் குரல் கொடுத்தாலே போதும்.
தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தால் ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிடவும் தயாராக இருக்கிறேன். வேறு யாருக்கு எதிராக போட்டியிடவும் தயாராக இருக்கிறேன். பெண்களுக்கு எதிராக குற்றம் செய்பவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.பாஜக சார்பில் அதிகம் போட்டியிட வேண்டும் என பிரதமர் மோடி விரும்புகிறார்’’ என்றார்.