தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயத்துக்கு தேவையான உரங்கள் இருப்பு இருக்கிறது

0
155
vivasayam

தூத்துக்குடி, ஜன. 11:

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயத்துக்கு தேவையான உரங்கள் போதிய அளவு இருப்பு உள்ளது என்றார் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.ஐ. முகைதீன். தூத்துக்குடியில் அவர் அளித்த பேட்டி:

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பான அளவு 429.44 மில்லி மீட்டர் ஆகும். ஆனால், நிகழாண்டில், டிசம்பர் 31 வரை 444.42 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இயல்பான மழை அளவைவிட தற்போது 15.02 மில்லி மீட்டர் அதிகமாக பெய்துள்ளதால் மாவட்டத்தில் அதிகப்படியான பகுதிகளில் விவசாயம் அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் நெல் பயிர் தற்போது வரை 14 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இன்னும் கூடுதலாக 5000 ஹெக்டர் அளவுக்கு சாகுபடி இருக்கும் என எதிர்பார்க்கிறோம். மாவட்டத்தில் இயல்பான நெல் சாகுபடி பரப்பு 14,386 ஹெக்டோர் ஆகும். இந்த ஆண்டு அரசு நிர்ணயித்த இலக்கு 17 ஆயிரம் ஹெக்டேர் ஆகும். இதேபோல, உளுந்து, பாசிப்பயறு போன்ற பயறு வகை பயிர்கள், மக்காசோளம், கம்பு, சோளம் போன்ற சிறுதானிய பயிர்கள், பருத்தி, எண்ணை வித்து பயிர்கள், அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இயல்பான வேளாண் பயிர்கள் சாகுபடி பரப்பு 1,37,456 ஹெக்டேர் ஆகும். நிகழாண்டுக்கான இலக்கு 1,77,310 ஹெக்டேர் ஆகும்.

மாவட்டத்தில் தற்போது 4500 டன் யூரியா, 1750 டன் டிஏபி, 1300 டன் பொட்டாஷ், 2700 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பில் உள்ளது. உரங்கள் தட்டுப்பாடு ஏதும் இல்லை. அதுபோல மாவட்டத்தில் இதுவரை 1,40,248 ஹெக்டேர் பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர் என்றார்.

பேட்டியின்போது, வேளாண்மை துணை இயக்குநர் பழனி வேலாயுதம், உதவி இயக்குநர்கள் கண்ணன் (தரக்கட்டுப்பாடு), மார்டின் ராணி (பயிர் காப்பீடு), வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுப்பாடு) மலர்விழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here