புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி, தி.மு.க தனித்து போட்டி..!

0
57
congress - Dmk

புதுச்சேரி மாநிலத்தில், காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி, தி.மு.க., தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளது என்கிற தகவல் சொல்லப்படுகிறது.

புதுச்சேரி மாநிலத்தில், தி.மு.க., ஆதரவுடன், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. தமிழக சட்டசபை தேர்தலுடன், புதுச்சேரி சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.அதனால், அம்மாநில கட்சிகள் மத்தியிலும், கூட்டணியிலும் குழப்பம்உருவாகி உள்ளது.காங்கிரசில் நிலவும் கோஷ்டி பூசல் காரணமாக, அம்மாநில அமைச்சர் ஒருவர், வரும் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்றும், மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாகவும், கடிதம் கொடுத்துள்ளார். அவர், எந்த நேரமும் அமைச்சர் பதவியை துறக்க கூடும். மற்றொரு அமைச்சர், ஐந்து எம்.எல்.ஏ.,க்களுடன், பா.ஜ.,வில் சேர, டில்லி தலைவர்களை ரகசியமாக சந்தித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் ஆட்சிக்கு, தற்போது ஆதரவு அளித்து வரும் தி.மு.க.,வும், கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளது. அங்கு, தனித்து போட்டியிடும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. புதுச்சேரி தெற்கு மாநில தி.மு.க., அமைப்பாளரும், எம்.எல்.ஏ.,மான சிவா, திருவள்ளுவர் தின விழாவில் பேசுகையில், ”தி.மு.க., தலைமையில் தான் கூட்டணி ஆட்சி அமையும். எந்த கட்சி வந்தாலும், தி.மு.க., தான் தலைமை வகிக்கும்,” என்றார்.

புதுச்சேரி தி.மு.க., மேலிட பொறுப்பாளராக, அரக்கோணம் எம்.பி., ஜெகத்ரட்சகன் நியமிக்கப்பட்டு உள்ளார்.நாளை, காலாப்பட்டில் நடைபெறும், தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில், ஜெகத்ரட்சகன் பங்கேற்கிறார்.அவரை வரவேற்க, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரளுகின்றனர். புதுச்சேரியில் பெரும்பான்மையாக வசிக்கும், வன்னியர் சமூகத்தை சேர்ந்த ஜெகத்ரட்சகனை, முதல்வர் வேட்பாளராக அறிவிக்க, தி.மு.க., மேலிடம் திட்டமிட்டுஉள்ளது. புதுச்சேரியில், தி.மு.க., தனித்து போட்டியிடுவதால், அம்மாநிலத்தில், காங்கிரஸ் ஆட்சி அமைப்பது தடுக்கப்படும் என்பதால், பா.ஜ., வட்டாரம் மகிழ்ச்சி அடைந்துள்ளது.

புதுச்சேரியை தொடர்ந்து, தமிழகத்திலும், காங்கிரசுக்கு கல்தா கொடுக்கப்படும் என்ற சந்தேகம், தமிழக காங்கிரசார் மத்தியில் எழுந்துள்ளது.தி.மு.க., கூட்டணியில், தமிழக காங்கிரசுக்கு, 15 தொகுதிகள் மட்டுமே வழங்க, தி.மு.க., முன்வந்துள்ளது. அதற்கு சம்மதித்து, கூட்டணியில் நீடித்தால், காங்கிரசுக்கு சிக்கல் இருக்காது. இல்லையேல், புதுச்சேரியை போல், தமிழகத்திலும் காங்கிரசுக்கு கல்தா தான் என்கிறது, தி.மு.க., வட்டாரம்.

இது குறித்து, காங்., வட்டாரங்கள் கூறியதாவது: சமீபத்தில், மதுரையில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண, காங்கிரஸ் தலைவர் ராகுல் வந்தார். ராகுலுடன் இணைந்து ஜல்லிக்கட்டு பார்வையிட, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மகளிர் அணி செயலர் கனிமொழி ஆகியோர் முன்வரவில்லை. இளைஞர் அணி செயலர் உதயநிதியை மட்டும் அனுப்பி வைத்ததை, காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் விரும்பவில்லை. புதுச்சேரியில், தி.மு.க., தனித்து போட்டியிடப் போகும் முடிவு, ராகுலுக்கு தெரிய வந்ததால், அவர் அதிருப்தி அடைந்துள்ளார். உதயநிதியை தனியாக சந்தித்து பேசுவதை, ராகுல் தவிர்த்தார்.

நான்கு மணி நேரம், மதுரையில் தங்க திட்டமிட்டிருந்த ராகுல், ஜல்லிக்கட்டு மைதானத்தில், 45 நிமிடங்கள் மட்டுமே இருந்தார். பசுமலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில், ராகுல் மதிய உணவு சாப்பிடுவதற்கு, தடபுடல் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதை தவிர்த்து விட்டு, மக்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். ஓட்டலுக்கு சென்றால், உதயநிதியை தனியாக சந்திக்க நேரிடும் என்பதால், அங்கு செல்வதை தவிர்த்துள்ளார். அதேசமயம், ஜல்லிக்கட்டு மைதானத்தில், ராகுல் அருகில் இருந்து, உதயநிதியும் போட்டியை பார்வையிட்டார். ஆனால், அரசியல் பற்றி, அவரிடம் ராகுல் பேசவில்லை. இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here