மழை நீர் தேக்கத்திற்கு அரசின் மெத்தனமே காரணம் – தூத்துக்குடியில் கனிமொழி பேட்டி

0
47
dmk news

தூத்துக்குடி,ஜன.17:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதனை தொடர்ந்து வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பி, உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ஆற்றின் கரையோரபகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன. குறிப்பாக ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராகி இருந்த நெற்பயிர்கள் முற்றிலும் சேதம் அடைந்தது. மேலும் மானாவாரி விவசாய பயிர்களான மக்காச்சோளம், உளுந்து ஆகியவை முளைத்தன.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பிரையண்ட் நகர், தபால் தந்தி காலனி, கதிர்வேல் நகர், ஆதிபராசக்தி நகர், கேடிசி நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பை மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. இப்பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் சுமார் 200 மோட்டார் பம்புகளை இயக்கியும், லாரிகள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனாலும் இப்பகுதிகளில் தண்ணீர் வடிந்தபாடில்லை.

இந்நிலையில் இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்த தொகுதி எம்.பியான கனிமொழி, பிரையண்ட் நகர் பகுதியை பார்வையிட்டார். அங்கு தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்ற ஏதுவாக ராட்சத இயந்திரங்களை கொண்டு வருவதற்கு அதிகாரிகளிடமும், தனியார் ஆலைகளை தொடர்பு கொண்டும் பேசினார். பல இடங்களில் மழைநீருடன் சாக்கடை கலந்திருப்பதையும் பார்வையிட்ட கனிமொழி செய்தியாளர்களிடம் பேசினார்.

’’மாநகராட்சி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கழிவு நீரோடைகள் தடுப்பனை போன்று உயரமாக இருப்பதால் மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி உள்ளது. மேலும் இவைகள் திட்டமிடாமல் அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு தேவை. இல்லையென்றால் இன்னும் மூன்று மாத காலத்திற்குள் ஆட்சி மாற்றம் வரும் திமுக ஆட்சியில் இதற்கு நிரந்தர தீர்வு காணப்படும். மக்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருவதற்கு காரணம் ஆட்சியில் இருப்பவர்களின் மெத்தனப்போக்கே காரணம்’’ என்றார் தொகுதி எம்.பியான கனிமொழி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here