’’ஓட்டு பெட்டியை கேப்ஷர் செய்யும் சூழ்நிலை இருக்கிறது’’ – சொல்கிறார் அனிதாராதாகிருஷ்ணன்!

0
149
anitha rathakrishanan

அப்படி இப்படியென்று எதோ ஒருவழியாக உள்ளாட்சி தேர்தல் நாளை நடக்க இருக்கிறது. இந்தநிலையில் தி.மு.க தலைமையின் ஆலோசனையின் பேரில் மாவட்டம் தோறும் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த மனுவில் தேர்தலை முறையாக நடத்த வேண்டும் முறைகேடுகள் எதுவும் நடந்துவிடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் இன்று 26.12.2019 தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்திப்நந்தூரியை சந்தித்தார் திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏவும் திமுக தெற்குமாவட்ட பொறுப்பாளருமான அனிதாராதாகிருஷ்ணன். அவருடன் தேர்தல் பொறுப்பாளரும் வேலூர் தொகுதி எம்.எல்.ஏவுமான கார்த்தி, ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ சண்முகையா உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

அவர் கொடுத்த மனுவி, ‘’உள்ளாட்சி தேர்தலை நேர்மையாகவும் சரியாகவும், ஜனநாயகத்தை பாதுகாக்கும்படியாகவும் சட்ட விதிகளின்படியும் நடத்திட வேண்டும் என உச்சநீதி மன்றம் வழியாகாட்டியுள்ளது. இந்த வழிகாட்டுதலின்படி தங்களது தலைமையில் தேர்தல் நடைபெறும் என்கிற நம்பிக்கை உள்ளது.

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணும் பணி 02.01.2020 அன்று நடைபெறவுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களை ஒன்றியம் வாரியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையங்களில் வலுவான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திட வேண்டுகிறோம். வாக்கு எண்ணும் மையங்களில் வெப் கேமரா வைக்கப்பட வேண்டும்.

வாக்கு எண்ணும் மையங்களில் உரிய அடையாள அட்டையுடன் கூடிய முகவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் தலைவருக்கான வாக்குகள் எண்ணி முடித்து, முடிவுகளை அறிவித்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கி சம்மந்தபட்ட ஊராட்சி முகர்வர்களை வெளியே அனுப்பிய பிறகுதான் அடுத்த ஊராட்சியின் வாக்கு எண்ணும் பணி துவங்க வேண்டும்.

அதேபோல் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கான ஒரு வார்டு வாக்கு எண்ணும் முடிவை அறிவித்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கி சம்மந்தபட்டவர்களை வெளியே அனுப்பிய பிறகுதான் அடுத்த வார்டின் வாக்கு எண்ணும் பணியை துவங்க வேண்டும். இதே நடைமுறைதான் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கும் பின்பற்ற வேண்டும்.

மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இந்த உத்தரவினை சரியான முறையில் அமல்படுத்த தாங்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்’’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

செய்தியாளர்களிடம் பேசிய அனிதா, ‘’மொத்தமாக எண்ணி மொத்தமாக வெளியில் சொல்வதில் குழப்பம் ஏற்படும். அப்படி செய்ய கூடாது. எண்ணியதை முதலில் சொல்லிவிட்டுதான் அடுத்ததை எண்ண வேண்டும்மென்று சொல்லியிருக்கிறோம். அது சம்மந்தமாக நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள். சில பூத்தில் கேப்ஷர் பண்ணுகிற சூழ்நிலை இருக்கிறது. அதை தடுக்கிற வகையில் வெப் கேமரா வைத்து நியாயமான தேர்தலை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறோம். மாவட்ட ஆட்சித்தலைவர் நடவடிக்கை எடுபார் என நம்பிக்கையோடு மனு கொடுத்திருக்கிறோம்’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here