தூத்துக்குடி,ஜன.25:
பேயன்விளை பள்ளியில் கடந்த 2017 – 18ல் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், பேயன்விளை, கா.ஆ.மேல்நிலைப் பள்ளியில் 2017 – 2018ம் ஆண்டில் பிளஸ் 2 படித்த மாணவர்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனு : நாங்கள் பிளஸ் 2 முடித்து 2½ ஆண்டுகளாகியும் இன்னும் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படவில்லை. ஆனால் 2018 – 2019, 2019 – 2020 ஆண்டுகளில் பயின்ற மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.
மேற்படிப்பிற்கான கல்லூரி சான்றிதழ் பள்ளியில் கொடுத்து ஒரு வருடம் ஆகிறது. தற்போது கொரோனா காரணமாக இணையவழி வகுப்புகள் நடந்து வரும் சூழ்நிலையில் மடிக்கணினி இருந்தால் பயனுள்ளதாக இருக்கும். எனவே, இதுகுறித்து மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.