தூத்துக்குடி,ஜன.25:
எரிவாயுகுழாய் பதிப்பதற்காக சேதப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களை ஐஓசிஎல் நிறுவனம் சரி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி ஒன்றிய கவுன்சிலர் தலைமையில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
இது குறித்து தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய திமுக கவுன்சிலர் ஆஸ்கர் தலைமையில் முன்னாள் மாநகர கவுன்சிலர் முள்ளக்காடு ஞானதுரை உள்ளிட்ட விவசாயிகள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரி வரை எரிவாயு குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் குலையன் கரிசல் மற்றும் பொட்டல்காடு பகுதிகளில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி குழாய் பதிப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதனையடுத்து ஐஓசிஎல் நிறுவனம் விவசாயிகளிடம் நடத்திய பேச்சு வார்த்தையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கறவை மாடு வழங்கப்படும்,
குலையன் கரிசல், முள்ளக்காடு, பொட்டல்காடு கிராமங்களில் பாதிக்கபட்ட விவசாயிகளின் குடும்பத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும், தோண்டிய பள்ளங்கள்முடித்தரப்படும், அனைத்து விவசாயிகளுக்கும் பெட்டைகுளத்திலிருந்து கரிசல் மற்றும் வண்டல் மண் இலவசமாக வழங்கி விவசாய விளைநிலத்தை சரி செய்து தருவோம் என உறுதி அளித்தனர். ஆனால் இந்த உறுதி மொழிகளை ஐஓசிஎல் நிறுவனம் நிறைவேற்றித் தரவில்லை.எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை பெற்றுத் தரவும் சேதப்படுத்தப்பட்ட விவசாய விளைநிலங்களை சரி செய்துகொடுக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.