திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா – லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

0
31
thiruchendur murugan kovil

திருச்செந்தூர், ஜன.28:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா முன்னிட்டு இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.

சுப்பிரமணிய சுவாமி கோவில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. பின்னர் காலை 8.45 மணிக்கு சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், பகல் 12 மணிக்கு உச்சிக்கால தீபாராதனையும் நடந்தது. பின்னர் சுவாமி அலைவாயுகந்த பெருமான், உள்பிரகாரத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.

லட்சக்கணக்கான பக்தர்கள்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

ஏராளமான பக்தர்கள் பச்சை நிற மற்றும் காவி நிற ஆடை அணிந்து காவடி எடுத்தும், அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் பாதயாத்திரையாக வந்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். அதே போல் குழந்தைகளும் காவடி எடுத்து வந்தனர். சில குழந்தைகள் முருகன் வேடம் அணிந்து வந்திருந்தனர். மேலும் ஆண் மற்றும் பெண் பக்தர்கள் அங்கபிரதட்சனம் செய்தும் சுவாமியை வழிபட்டனர். அங்கபிரதட்சனம் செய்ய முடியாத சில பெண்கள் அடி பிரதட்சனம் செய்தும் வழிபட்டனர்.

ஏற்பாடுகள்

 தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மேற்பார்வையில், திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here