தூத்துக்குடி,பிப்.1:
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், கலெக்டர் செந்தில்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது, கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டு இருந்த வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பத்து மாதங்களுக்கு பிறகு தமிழக அரசின் உத்தரவுபடி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு கடந்த ஆண்டு கொடிநாள் வசூலாக ரூ.1.08 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இருந்தபோதும் கொரோனா பரவல் இருந்த காலத்திலும் கூட ரூ.84 லட்சம் கொடிநாள் வசூல் செய்து நமது மாவட்டம் சாதனை படைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த வருடம் பருவம் தவறி தொடர்ந்து பெய்த மழையால் கோவில்பட்டி, கயத்தார், விளாத்திகுளம், புதூர், கயத்தார் உள்ளிட்ட பகுதிகளில் 90ஆயிரம் ஹெக்டேர் மானாவரி பயிர்களும், 15 ஆயிரம் ஹெக்டேரில் தோட்டப் பயிர்களும் சேதம் அடைந்துள்ளது.
இதுபோன்று, தாமிரபரணி பாசனப்பகுதிகளில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஸ்ரீவைகுண்டம், கருங்குளம் வட்டாரப் பகுதிகளில் 40ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளது.
தொடர்மழை மற்றும் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிட ஏதுவாக வருவாய்த்துறை மற்றும் வேளாண்துறை மூலமாக பயிர் சேத மதிப்பு குறித்த கணக்கெடுக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, பயிர்களை சாகுபடி செய்து மழையால் பாதிக்கப்பட்டுள்ள தகுதியான விவசாயிகள் அனைவருக்கும் பயிர்களுக்கான காப்பீட்டு தொகையும், நிவாரணமும் கிடைத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தொடர் மழையால் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி கிடக்கும் மழைநீரை அகற்றும் பணிகள் முழுமூச்சாக நடைபெற்று வருகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் மாநகர் பகுதிகளில் மழைநீரை அப்புறப்படுத்திய பின்னர் மழைநீர் வடிகால்கள் அனைத்தும் தூர் வாரப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை மற்ற மாவட்டங்களை காட்டிலும் கொரோனா பரவல் கட்டுக்குள்ளே இருந்து வருகிறது. தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கோவில்பட்டி, திருச்செந்தூர் அரசு மருத்துவமனைகள் உட்பட மாவட்டத்தில் மொத்தம் 15மையங்களில் தினசரி 1500பேர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்றார்.
கொடிநாள் நிதி வசூலில் தங்களது துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இலக்கினை 100 சதவீதம் முழுமையாகவும், இலக்கினை விட கூடுதலாகவும் வசூல் செய்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம் உள்ளிட்ட 18 அதிகாரிகளுக்கு கலெக்டர் செந்தில்ராஜ் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
இதில், கூடுதல் கலெக்டர் விஷ்ணுசந்திரன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் தமிழரசி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி, மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம், முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநர் நாகராஜ், திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் குற்றாலம், மாவட்ட ஆதிதிராவிடர் நலஅலுவலர் பரிமளா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.