தூத்துக்குடி,பிப்.2:
இது குறித்து தூத்துக்குடி – திருநெல்வேலி ஒழுங்குமுறை விற்பனைக்குழு தலைவர் சி.த.செல்லபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : திருநெல்வேலி விற்பனைக்குழுவுக்குட்பட்ட தூத்துக்குடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இந்த மாதம் முதல் புதன்கிழமை தோறும் உளுந்து, பாசிப்பயறு, சோளம், கம்பு, மக்காச்சோளம் போன்ற விளை பொருட்கள் மறைமுக ஏலம் மூலமாக விவசாயிகளுக்கு விற்றுத்தர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த மறைமுக ஏலத்தில் விளைபொருட்களை கொள்முதல் செய்ய உள்ளூர் வெளியூர் வியாபாரிகள் கலந்துகொள்ள உள்ளனர். சரியான எடை, உடனடி பணப் பட்டுவாடா, தரகு கமிஷன், மகிமை போன்ற பிடித்தங்கள் இல்லாதது, ஒன்றுக்கு மேற்பட்ட வியாபாரிகளால் மறைமுக ஏலம் என போட்டி விலையில் விவசாயிகளுக்கு அதிக விலை கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.
எனவே, விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை நன்கு உலர்த்தி, தூசு மற்றும் அயல்பொருட்கள் இல்லாமல் சுத்தம் செய்து கொண்டு வந்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இதுதொடர்பான விபரங்களுக்கு தூத்துக்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளரை 90950 99472 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்’’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.