தூத்துக்குடி, பிப்.6:
தூத்துக்குடியில் விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 30பேரை போலீசார் கைது செய்தனர்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த கோரிக்கையை வலியுறுத்தியும், டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், விவசாயிகள் மீது டெல்லி போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்தும் மாநிலம் முழுவதும் சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.
இதற்கேற்ப, தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ-., சுடலையாண்டி முன்னிலை வகித்தார்.
இதில், மண்டல தலைவர் தனலெட்சுமி, எஸ்.சி., எஸ்.டி பிரிவு மாவட்ட தலைவர் ராஜாராம், மாநகர துணைத்தலைவர் பிரபாகரன், பொதுச்செயலாளர் ராஜா, வார்டு தலைவர்கள் சித்திரை பால்ராஜ், கோபி, அம்பிகாபதி, பொதுக்குழு உறுப்பினர் சவரியானந்தம், மகிளா காங்கிரஸ் நீலா, கமலம், வள்ளிதங்கம், பேச்சியம்மாள், ஈஸ்வரி, தங்ககனி உட்பட 30பேரை தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார் கைது செய்தனர்.