தூத்துக்குடி,பிப்.8:
தூத்துக்குடி மாநகரில் பழுதடைந்த அனைத்து சாலைகளையும் உடனடியாக சரி செய்ய வேண்டும் என புதிய கமிஷனருக்கு கீதாஜீவன் எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் புதிய கமிஷனருக்கு அனுப்பியுள்ளமனுவில் கூறியிருப்பதாவது :
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து தெருக்களிலும் பழைய குழல் விளக்குகளை மாற்றி புதிதாக எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எல்.இ.டி விளக்குகள் அனைத்தும் புதியதாக மாற்றிய 4 நாட்களுக்குள் நிறைய தெருக்களில் பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் பல தெருக்கள் இருள் சூழ்ந்துள்ளது. பழுதடைந்த எல்.இ.டி விளக்குகள் அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் சீரமைத்திடவும், அதுபோல அண்மையில் பெய்த பெருமழை வெள்ளத்தில் மாநகரத்தில் பெருமான்மையான சாலைகள் சேதமடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலைகளில் செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனா்.
எனவே பழுதடைந்த சாலைகள் அனைத்தையும் உடனடியாக சரி செய்திடவும், புதிய சாலைகள் அமைத்திடவும், மேலும் பெரும்பான்மையான தெருக்களில் கழிவு நீா் வடிகால்கள் சேதமடைந்து காணப்படுகிறது. அதுபோல மழைநீரோடு கழிவுநீா் சோ்ந்து சுகாதார சீா்கேடாக உள்ளது. ஆகவே பள்ளங்களில் தேங்கியிருக்கும் நீரை வெளியேற்றி, சரள் அடித்து உயா்த்தி, கொசு மருந்து அடித்திடவும், பீளிச்சிங் பவுடா் தெளிக்கவும் நடவடிக்கை எடுத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.