தூத்துக்குடி, பிப். 13:
தூத்துக்குடி மாவட்டத்தில் 4 இடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிப்ரவரி 17 ஆம் தேதி பிராசரம் மேற்கொள்கிறார்.
தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கோவில்பட்டி மற்றும் விளாத்திக்குளம் தொகுதிகளில் மட்டும் கடந்த மாதம் 3 ஆம் தேதி பிரசாரம் மேற்கொண்ட முதல்வர், மற்ற தொகுதிகளில் பிரசாரத்தை ஒத்திவைத்தார்.
இந்நிலையில், இரண்டாம் கட்டமாக பிப்ரவரி 17 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி ஆகிய நான்கு தொகுதிகளிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
அதன்படி, 17 ஆம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் காலை 10.15 மணிக்கு தூத்துக்குடி வரும் முதல்வருக்கு அதிமுகவினர் வரவேற்பு அளிக்கின்றனர். தொடர்ந்து, முற்பகல் 11 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் செல்லும் அவர் அங்கு பேசுகிறார்.
அதன்பிறகு, நண்பகல் 12 மணிக்கு திருச்செந்தூரில் மகளிர் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர், நண்பகல் 1 மணிக்கு ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மாப்பிள்ளையூரணியில் நடைபெறும் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு கூட்டத்தில் கலந்து கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கு பேசுகிறார்.
அதன்பிறகு மதிய உணவு இடைவேளையின்போது கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசும் முதல்வர் சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு தூத்துக்குடியில் மாலை 6 மணிக்கு நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அவர் வருகையை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரான அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ, தெற்கு மாவட்டச் செயலர் எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்ஏ ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.