தூத்துக்குடி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – ரூ.17.82 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் – கலெக்டர் வழங்கினார்

0
167
thoothukudi collector

தூத்துக்குடி,பிப்.16:

ஒவ்வொரு கலெக்டர் அலுவலகங்களிலும் வாரம்தோறும் திங்கள் கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது.மக்கள் தங்களின் தேவைகளுக்காக மாவட்ட அதிகாரியான கலெக்டரிடம் மனு கொடுப்பதும், அந்த மனுவை கலெக்டர் பரிசீலனை செய்து சம்மந்தபட்ட துறைமூலம் தீர்வு காண்பதும் வழக்கமாகும்.

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை வைத்த சுமார் 42 பயனாளிகளுக்கு ரூ.17.82 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.

வருவாய்த்துறை மூலம் 29 பயனாளிகளுக்கு தலா ரூ.60,000 வீதம் ரூ.17.40 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டா, 2 நபர்களுக்கு தலா ரூ.1000 வீதம் மாற்றுத்திறனாளி உதவித்தொகை ரூ.2000, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் 8 பயனாளிகளுக்கு தலா ரூ.3,573 வீதம் ரூ.28,584 மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரம், 2 பயனாளிகளுக்கு ரூ.5,341 வீதம் ரூ.10,682 மதிப்பில் விலையில்லா தேய்ப்புப்பெட்டி, முதலமைச்சரின் தனிப்பிரிவில் இருந்து வரப்பெற்ற மனுவில் ஒரு பயனாளிக்கு ரூ.1000 மாற்றுத்திறனாளி உதவித்தொகை என மொத்தம் 42 பயனாளிகளுக்கு ரூ.17,82,266/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் கலெக்டர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது : தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கடந்த 3 மாதங்களில் ஆன்லைன் மற்றும் நேரடியாக பெறப்பட்ட 1612 மனுக்களில் 1355 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காண உரிய அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் 1.21ஹெக்டேர் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள மானாவரி மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. இதற்கு உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு, முதல்கட்டமாக ரூ.15கோடியே 48 லட்சம் வரப்பெற்று 12,984 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடன் தள்ளுபடி தொடர்பாக கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்தவுடன் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது என்றார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் தமிழரசி, பிற்படுத்தபட்டோர் நல அலுவலர் ஜீவரேகா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here