தூத்துக்குடி,பிப்.15:
கோவில்பட்டி நகராட்சியில் 25 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் முறைகேடாக கொடுக்கப்பட்டுள்ளது என பா.ம.கவினர் கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைப்பொதுச்செயலாளர் இராமச்சந்திரன் தலைமையில் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிற்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. எனவே எட்டையபுரம் தாலுகாவில் உள்ள ஊராட்சிகளை இணைத்து தனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைக்க வேண்டும் எட்டையபுரத்தில் தீயணைப்பு நிலையம், அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும். எட்டையபுரம் அரசு மருத்துவ மனை 24 மணிநேரமும் செயல்பட வழி செய்ய வேண்டும்.
எட்டையபுரத்தை சுற்றியுள்ள மக்கள் மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுவிட்டு வரும் போது தூத்துக்குடி – அருப்புக்கோட்டை பைபாஸ் ரோட்டில் முத்தையாபுரம் காவல்நிலையம் விலக்கில் இறக்கிவிடுகின்றனர். அந்த இடத்தில் பயணிகள் நிழல் குடை அமைக்க வேண்டும். மேலக்கரந்தை விலக்கு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.
இளையரசனேந்தல் பிர்க்காவிலுள்ள 12 ஊராட்சிகளையும் தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்க வேண்டும். கோவில்பட்டி நகராட்சியில் 25 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் முறைகேடாக கொடுக்கப்பட்டுள்ளது. முறைகேடாக இனைப்பு வழங்கிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன் களை தள்ளுபடி செய்யவேண்டும் என கூறியுள்ளனர்.