மணியாச்சி அருகே லோடு ஆட்டோ ஓடைக்குள் கவிழ்ந்து விபத்து – 5 பெண் விவசாய தொழிலாளர்கள் பலி

0
219
accident news

தூத்துக்குடி,பிப்.16:

தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி அருகே லோடு ஆட்டோ காற்றாற்று ஓடையில் கவிழ்ந்ததில் 5 பெண் விவசாய தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகே உள்ள மணப்படை வீடு, திருமலைக்கொழுந்துபுரம், மணல்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்த 31 பெண் விவசாய தொழிலாளர்கள் லோடு ஆட்டோவில் மணியாச்சி, புதியம்புத்தூர் பகுதியில் நடைபெறும் உளுந்து செடிகள் பறிக்கும் பணிக்காக வந்தனர். ஆட்டோவை திருமலைக்கொழுந்துபுரத்தை சேர்ந்த சித்திரை(50) என்பவர் ஓட்டினார். இதில், 15 பேர் மணியாச்சி பகுதி நிலங்களில் நடைபெறும் பணிக்கும, 16 பேர் புதியம்புத்தூர் அருகே சவரிமங்கலத்தில் நடைபெறும் பணிக்கும் அழைத்து வரப்பட்டனர்.

மணியாச்சி காவல்நிலையத்துக்கு முன்பு சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள ‘எஸ்’ வளைவில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த லோடு ஆட்டோ சாலையோரம் இருந்த பாலத்தில் மோதி, காற்றாற்று ஓடையில் கவிழ்ந்தது. ஓடையில் அதிகளவு தண்ணீர் இல்லையென்றாலும், லோடு ஆட்டோவில் அளவுக்கு அதிகமான ஆட்கள் இருந்த நிலையில் ஒருவர் மேல் ஒருவர் விழுந்ததால், அனைவரும் இடுபாடுகளில் சிக்கி அலறினர். சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில், மூச்சு திணறி திருநெல்வேலி மாவட்டம் மணப்படை வீடு அம்பேத்கர் நகரை சேர்ந்த கலைச்செல்வன் மனைவி பேச்சியம்மாள்(30), சுடலை மனைவி ஈஸ்வரி(27), கணேசன் மனைவி மலையரசி(48), மனோகரன் மனைவி பேச்சியம்மாள்(54), வேலு மனைவி கோமதி(65) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், மணியாச்சி டி.எஸ்.பி. சங்கர், சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகையா மற்றும் மணியாச்சி உட்கோட்ட காவல் ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு சுமை ஆட்டோ மீட்டு, அதன் கீழ் சிக்கிய தொழிலாளர்கள் மீட்டனர்.

விபத்தில், திருமலைக்கொழுந்துபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி பேச்சியம்மாள்(65), சுந்தரம் மனைவி செல்லத்தாய்(60), மாரியம்மாள்(50), மகாராஜன் மனைவி லிங்கம்மாள்(35), மகாராஜன் மனைவி பேச்சியம்மாள்(30), மணிகண்டன் மனைவி விஜி(36) உள்ளிட்ட 21 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக திருநெல்வேலி, தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும், ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here