திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசித்திருவிழா – கலெக்டர் தலைமையில் ஆலோசனை

0
65
thiruchendur murugan kovil

தூத்துக்குடி, பிப். 16:

திருச்செந்தூர் அருள் மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கோவிட் 19 நடைமுறைகளை பின்பற்றி மாசித் திருவிழாவை நடத்துவது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருச்செந்தூர் அருள் மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா வரும் 17ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது. திருவிழா முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட கோவிட்-19 ஊரடங்கு நடப்பில் உள்ள நிலையில் திருக்கோயில்களில் திருவிழாக்கள் நடத்துவது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையரால் வழங்கப்பட்டுள்ள நிலையான இயக்க வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் நடத்துதல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

அதன்படி முதல் நாள் (17ம் தேதி) அன்று கொடியேற்றம், 5-ம் நாள் (21ம் தேதி) குடைவரை வாயில் தீபாராதனை, 7-ம் நாள் (23ம் தேதி) உருகு சட்ட சேவை, வெற்றிவேர் சப்பரம் எழுந்திருப்பு, சிவப்பு சாத்தி நிகழ்ச்சிகளும், 8-ம் நாள் (24ம்தேதி) பச்சை சாத்தி நிகழ்ச்சி, 10-ம் நாள் (26ம்தேதி) தேரோட்டமும், 11-ம் நாள்(27ம்தேதி) தெப்ப உற்சவமும் நடக்கிறது.

இந்நிகழ்ச்சிகளில் தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த ஆண்டு சுவாமி புறப்பாடு மற்றும் தேரோட்டம் ஆகியன திருக்கோயிலுக்கு வெளியில் நடைபெற உள்ளது. மாசித் திருவிழாவில் 1-ம் நாள் கொடியேற்றம் அன்று காலை 5.00 மணிக்கு மேல் 5.30 மணி வரை சுமார் 500 பக்தர்கள் திருக்கோயிலுக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி காண அனுமதிக்கப்படுவர். 5-ம் நாள் அன்று இரவு 7:30 மணியளவில் குடைவரை வாயில் தீபாராதனை நிகழ்ச்சியில் சுமார் 1000 பக்தர்கள் நிகழ்ச்சியைக் காண அனுமதிக்கப்படுவர்.

7-ம் நாள் (23ம்தேதி) அன்று அதிகாலை 4.30 மணி முதல் 5.00 மணி வரை நடைபெறவுள்ள உருகு சட்ட சேவை மற்றும் காலை 8.30 மணியளவில் நடைபெறும் வெற்றிவேல் சப்பரம் எழுந்திருப்பு (ஏற்றம் காணல்) ஆகிய நிகழ்ச்சிகளைக் காண 1000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். அன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறும் சிவப்பு சாத்தி நிகழ்ச்சியில் சுமார் 500 பக்தர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்பட வேண்டும். 8-ம் நாள் (24ம்தேதி) அன்று பகல் 11.30 மணிக்கு நடைபெறும் பச்சை சாத்தி நிகழ்ச்சியில் சுமார் 1000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். 10-ம் நாள் (26ம் தேதி ) காலை 7.00 மணி முதல் 7.30 மணி வரை நடைபெறும் தேரோட்ட நிகழ்ச்சியில் சுமார் 1000 பக்தர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்பட வேண்டும். 11-ம் நாள் (27ம் தேதி) இரவு 10.30 மணிக்கு மேல் நடைபெறும் தெப்ப உற்சவ நிகழ்ச்சியில் சுமார் 500 பக்தர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்பட வேண்டும்.

கோயில் நிர்வாகத்தின் மூலம் நிகழ்ச்சிகளை காண வரும் மற்றும் கோயிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும். கோயிலுக்குள் தேவையான இடங்களில் பக்தர்கள் கை கழுவுவதற்கான வசதியும், சானிடைசர் வசதியும் எற்படுத்தி தர வேண்டும். ரதவீதிகள் மற்றும் கோவிலுக்கு வரும் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க திருச்செந்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் கோட்டப் பொறியாளர் (நெடுஞ்சாலைத் துறை) ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டது. தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், தற்காலிக கழிப்பறை வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அந்தந்த துறைகளின் மூலம் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். திருக்கோயில் மூலமாக அன்னதானம் பார்சல் செய்து பக்தர்களுக்கு வழங்கப்படும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here