தூத்துக்குடி,பிப்.17:
விரைவில் நடைபெற இருக்கும் சட்ட மன்ற தேர்தல் பிரசாரத்திற்காக தமிழ முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தூத்துக்குடிக்கு வந்தார். சென்னையிலிருந்து விமானம் மூலம் வாகைகுளம் விமானநிலையம் வந்த முதல்வருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. அமைச்சர் கடம்பூர் ராஜூ, தெற்குமாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து முதல்வரை வரவேற்றனர்.
அங்கிருந்து கார் மூலம் ஸ்ரீவைகுண்டம் கிளம்பியிருக்கிறார் முதல்வர். அங்கு தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு, திருச்செந்தூர் செல்கிறார். அங்கிருந்து தூத்துக்குடி வரும் அவர், மதிய உணவிற்கு பிறகு மாலையில் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெறும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் குழாய் மூலம் எரிவாயுவை கொண்டு செல்லும் திட்டத்தை காணொலி மூலம் காண்கிறார்.

அதன் பிறகு இரவு 7 மணி அளவில் தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.