தூத்துக்குடி, பிப்.18:-
நிறுத்தப்பட்டிருக்கும் தூத்துக்குடி – ஓகா இடையிலான எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்க செயலாளர் பிரம்மநாயகம் தலைமையில் தலைவர் கல்யாணசுந்தரம், நிர்வாக செயலாளர் ஆனந்தன் ஆகியோர் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில், ’’கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் உள்ளிட்டவை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து சென்னை, கோவைக்கு இயக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ள லிங்க் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இந்த ரயில்களை மீண்டும் இயக்கிடவேண்டும்.
மேலும், தூத்துக்குடி – ஓகா – தூத்துக்குடி வாராந்திர ரயிலை மீண்டும் இயக்கவேண்டும். திருநெல்வேலி&பாலக்காடு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்கவேண்டும், தூத்துக்குடி&மைசூர் விரைவு ரயிலை சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்றி காலை 9மணிக்குள் தூத்துக்குடிக்கு வந்து சேருமாறும், மாலை 6மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படுமாறும் மாற்றி அமைத்திடவேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.