”தெருவிற்கு தலைவராக வருவதற்கு முன் அகில இந்திய தலைவராக வருவதற்கு ஆசைப்படுகிறார்கள்” – தூத்துக்குடியில் கே.எஸ்.அழகிரி

0
24
congress

சட்ட மன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இம்மாதம் 27,28 மற்றும் மார்ச் 1ம் தேதி தூத்துக்குடி,நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு வரயிருக்கிறார். அவரை வரவேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்வது சம்மந்தமாக நிர்வாகிகள் கூட்டம் தூத்துக்குடி சிட்டி டவர் வளாகத்தில் நடந்தது.

தூத்துக்குடி மாநகர மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். தூத்துக்குடி தெற்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர்கள் ஊர்வசி அமிர்தராஜ், காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட அந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசினார்.

’’காங்கிரஸ் கட்சியில் வலுவான தொண்டர் சக்தி இருக்கிறது. அப்படி இருப்பதால்தான் கோவைக்கு ராகுல்காந்தி வந்தபோது எதிர்பார்த்ததைவிட கூடுதலாக தொண்டர்கள் குவிந்தார்கள். அவர்களை முறையாக பயன்படுத்த வேண்டும். அந்த வல்லமை காமராஜரிடம் இருந்தது.

அவர் இரண்டு பிரதமர்களை உருவாக்கியவர், அவருக்கு அந்த ஆற்றல் இருந்தது. அதுமாதிரியான அதிசயம் காங்கிரஸ் கட்சியில்தான் மட்டும்தான் நடக்கும். காமராஜர் நினைத்திருந்தால் பிரதமராக கூட வந்திருக்கலாம். அவர் காந்திய வழியை பின்பற்றக் கூடியவர். அடுத்தவர்களுக்காக உருவாக்குவதை தனக்கானதாக ஆக்கமாட்டார். அதனால்தான் அவர் அப்படி நினைக்கவில்லை. அப்படிப்பட்ட காமராஜரை நாம்பெரிய அளவில் கொண்டாடவேண்டும். அந்த உணர்ச்சியும் எழுச்சியும் ஒவ்வொரு தேசிய தோழரிடமும் இருக்க வேண்டும்.

அதேபோல் காங்கிரஸ் கட்சிக்கு வலுவான அடித்தளம் தமிழகத்தில் இருக்கிறது. அதை முறையாக பயன்படுத்தி கட்சியை வளர்க்க வேண்டும் அவ்வளவுதான். கடந்த 33 வருடங்களுக்கு முன் வாக்குச்சாவடி கமிட்டி அமைக்கவேண்டும் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை அந்த கமிட்டி அமைக்கப்படவில்லை. அந்த கமிட்டி அமைத்துவிட்டால் காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்துவிடும்.

அதற்கு காங்கிரஸ் கட்சியினர் முதலில் தம் குடும்பத்தில் உள்ளவர்களை கட்சியில் சேர்க்க வேண்டும். அவர்களை வேறு கட்சியில் சேரவிட்டுவிட கூடாது. அடுத்து நம் சாதிக்காரர்களை கட்சிக்குள் கொண்டு வர வேண்டும். அதற்கு பிறகு பக்கத்துவீட்டுக்காரரை சேர்க்க வேண்டும். தொடர்ந்து உங்க தெருவில் உள்ளவர்களை சேருங்கள் உங்களிடம் சுமார் ஐம்பதுபேர் உருவாகிவிடுவார்கள்.

ஐம்பது வருடமாக அதை நாம் செய்யவில்லை. நாம் தெருவிற்கு தலைவராக வருவதில்லை. ஆனால் மாநில தலைவராகவோ, முடிந்தால் அகில இந்திய தலைவராக கூட வர ஆசைப்படுகிறோம். கொஞ்சம் முயற்சி செய்து பார்க்க வேண்டும். தமிழகத்தில் காங்கிரஸுக்கு இடம் இருக்கிறது என நாம் கருதுகிறமோ இல்லையோ ராகுல்காந்தி கருதுகிறார்.அதனால்தான் பீஹார், ராஜஸ்தானுக்கு இந்த அளவில் சுற்றுப்பயணம் செல்லாதவர் தமிழகத்துக்கு வருகிறார் என்றால் அவருக்கு தமிழகத்தில் இருக்கும் பிடிப்புதான் காரணம். இங்கே காங்கிரஸுக்கு ஒரு வேர் இருக்கிறது என அவர் நினைக்கிறார்’’ இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here