தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி – தூத்துக்குடியில் சசிகலாபுஷ்பா பேச்சு

0
101
bjp news

தூத்துக்குடி, பிப்.20:-

தூத்துக்குடி மாவட்ட பாஜக சிறுபான்மை அணி சார்பில் ஏழை – எளியவர்களுக்கு தையல்மெஷின், சேலை உள்ளிட்ட ரூ.5லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி அபிராமி மஹாலில் இன்று 20.02.2021 நடைபெற்றது.

விழாவிற்கு, மாநில சிறுபான்மை அணி செயற்குழு உறுப்பினர் அசோகன் தலைமை வகித்தார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட சிறுபான்மை அணி பொதுச்செயலாளர் வழக்கறிஞர் எஸ்.பி.வாரியர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கிராமப்புற மற்றும் நகர்புற வளர்ச்சி பிரிவு செயலாளர் மணக்கரை ஏ.முருகன், தூத்துக்குடி மாவட்ட அறிவுஜீவி அணி அமைப்பு செயலாளர் நாட்டாமை எம்.கே.மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில சிறுபான்மை அணி பொதுச்செயலாளர் கோவை ஜோசப் ஜான்சன் வரவேற்றார்.

விழாவில், மாநில சிறுபான்மை அணி தலைவர் ஆசிம் பாஷா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 500பெண்களுக்கு சேலை, 25பேருக்கு தையல்மெஷின் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம், ’’எங்கள் தலைவர் மோடி நாம் அனைவரும் இந்தியர் நமக்குள் ஜாதி, மதம், இனம், மொழி என எந்தவிதமான பாகுபாடுகளும் இல்லை என்ற நிலைப்பாடுடன் செயல்பட்டு வருகிறார்.

அதாவது இந்த நாடு தாமரையின் கீழ் இருக்கவேண்டும். நாங்கள் எப்போதும் மக்களுக்கு இதுபோன்ற உதவிகளை எந்தவித பிரதிபலன்களையும் எதிர்பார்க்காமல் செய்து கொண்டே தான் இருப்போம். பாஜக ஆட்சியில் தான் சிறுபான்மையின மக்கள் அனைவரும் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். வரவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் எங்கள் அணிக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பதை தலைமைதான் முடிவு செய்யும்’’ என்று பேசினார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தூத்துக்குடி முன்னாள் மேயருமான சசிகலாபுஷ்பா பேசும்போது, ‘’இங்கே கூடியிருக்கும் பெண்கள் கூட்டத்தை பார்க்கும்போது நிச்சயமாக வருகிற சட்ட மன்றத் தேர்தல்ல தூத்துக்குடி தொகுதியில் பி.ஜே.பியோ அல்லது அதிமுகவோ அல்லது அதிமுக கூட்டணியில் இருக்கிற வேறு எதோ ஒரு கட்சிதான் வெற்றி பெறும் என உறுதியாக தெரிகிறது. நான் இப்போது சொன்னத ஒவ்வொரு பெண்களும் வீட்டில் இருக்கும்போது நினைத்துப்பார்ப்பீங்க. உங்களுக்கு பாஜகதான் நினைவுக்கு வரும்.

இதை நாங்க எப்படி உறுதியா சொல்றோம்னா அதுக்கு மோடிதான் காரணம். முதல்வரா இருந்து குஜராத்தை வளமாக்கினார். இப்போ இந்தியாவுக்கு பிரதமராக இருந்து இந்தியாவையே வளமாக்கி வருகிறார். அவர் யாருக்காகவும் எந்த வித சொத்தையும் சேர்க்கவில்லை. அவர் எடுக்கிற ஒவ்வொரு நடவடிக்கையும் நாட்டு மக்கலின் நன்மைக்கானதாக மட்டுமே இருக்கிறது.

முன்பெல்லாம் சீனா ஆக்கிரமிக்கிறது என்பார்கள். பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் தொல்லை என்பார்கள். ஆனால் நம்ம மோடி பிரதமரா வந்த பிறகு தீவிரவாதம் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருக்கிறது. காஷ்மீரில் 370வது பிரிவை கொண்டு வந்து அங்கே அமைதியை நிலைநாட்டியிருக்கிறார். முரண்பட்ட சில இடங்களில் இப்போது தேசிய கீதம் பாடப்படுகிறது. அங்கே மட்டுமா இங்கே கடவுளே இல்லை என்று சொல்லி வந்த திமுககாரகள் கூட வேல் யை கையில தூக்கி வைத்து நிற்கிறார்கள். அந்த அளவிற்கு நிலைமையை உருவாக்கியிருக்கிறது பாஜக.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு காணாமல் போன கீதாஜீவன், இப்போ ஓடி ஓடி வந்து மக்களை பார்க்கிறார். திமுகவின் ஐடியாலஜி என்ன தமிழ் ஆதரவு, கடவுள் மறுப்பு அப்படித்தானே. மோடி போகிற இடத்தில் எல்லா தமிழ் தமிழ் என பேசி தமிழுக்கு பெருமை சேர்க்கிறார். ஆனால்திமுகவினர் தமிழுக்காக என்ன செய்தார்கள்?

மத்தியில் பாஜக ஆட்சி நடக்கிறது. அதேபோல் மாநிலத்திலும் பாஜக ஆட்சி வேண்டாமா? தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சியே வேண்டும். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக – பாஜக கூட்டணி வேட்பாளரே வெற்றி பெறுவர்.

நான் இங்கே மேயராக இருந்தபோது எதாவது ரோட்டில் தண்ணீர் கட்டிக்கிடந்தால் உடனே அதிகாரிகளை கூப்பிட்டு அதை அகற்ற செய்வேன். கீதாஜீவனால் அது முடியவில்லை. தெரிந்தோ தெரியாமலோ பேசக் கூட தெரியாத கீதாஜீவனை எம்.எல்.ஏ ஆக்கிவிட்டீர்கள். இனிமேல் அது நடக்காது. அமைச்சராக இருந்த அவர் மக்களுக்கு ரேசன் அரிசியை கொடுக்கிறார். அவர் மீது அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு இருக்கிறது. அவர் அதுக்காக அழைந்து கொண்டிருக்கிறார்.

திருப்பதி உண்டியல் பக்கத்தில் போலீஸ் காவல் போடப்பட்டிருந்ததை பார்த்த கனிமொழி, கடவுள் இருக்கிறது என்றால் உண்டியலுக்கு ஏன் காவல்போட வேண்டும் என கேட்டார். அதுக்கு நம்ம கட்சிக்காரர் ஒருவர், உங்களை போன்ற கடவுள் இல்லை என்று சொல்றவங்க முன்பெல்லாம் கோவொலுக்கு வரமாட்டாங்க. அப்போ காவல் போடவேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. இப்போ நாட்டை கொள்ளையடிக்கிற நீங்கள்லாம் கோவிலுக்கு வர்றீங்க. அப்போ காவல் போட்டுதானே ஆகவேண்டும் என கேட்டு பதில் சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்ட கடவுள் மறுப்பாளர்கள் இப்போ அதிலிருந்து இறங்கி வந்திருக்கிறார்கள். ஸ்டாலின் வேலோடு நிற்கிறார். பாஜகவை பார்த்து பயந்துவிட்டார்கள் இந்த திமுகவினர்.

மோடி ஆட்சிக்கு முன்பெல்லாம் நமது மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருந்தது. இப்போது அவர்களுக்கு எந்தவித பயமும் இல்லை. கொரோனாக்கான மருந்தை இப்போது உலகத்திற்கே இந்த மோடி அரசாங்கம் கொடுத்து வருகிறது. முத்தலாக் சட்டத்தை இஸ்லாமிய பெண்கள் ஏகபோகமாக ஆதரிக்கிறார்கள். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஹைதரபாத்தில் தற்போது பாஜக வெற்றி பெற்றிருப்பதே அதற்கு உதாரணமாகும்.

75 வயதுக்கு பிறகு வருமான வரி கணக்கு காட்ட வேண்டியதில்லை என்று மத்தியரசு சொல்லிவிட்டது. ஆகவே பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள்,சிறுபான்மையினர் என அனைத்து தரப்பினரும் ஆதரிக்கும் ஆட்சியாக மத்திய பாஜக அரசு விளங்குகிறது. தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சி மலரவேண்டும். அதற்கு தூத்துக்குடி தொகுதியில் தாமரை வெற்றி பெற்று அதை நிரூபிக்க வேண்டும்’’ என்றார்.

இதில், மாநில சிறுபான்மை அணி துணைத்தலைவர்கள் பிரவின்பால், ஜான்சன், மாநில சிறுபான்மை அணி செயலாளர்கள் கல்வாரி தியாகராஜன், சதிஸ்ராஜா, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் பால்ராஜ், மாநில வணிகர் பிரிவு தலைவர் ராஜகண்ணன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சசிகலாபுஷ்பா, மாநில செயற்குழு உறுப்பினர் அஜ்மல்கான், மாவட்ட தலைவர்கள் ராமநாதபுரம் அப்துல்லா, விருதுநகர் தாஸ்வின், சிவகங்கை பீட்டர் ஆனந்த், தூத்துக்குடி மாவட்ட பாஜக தலைவர் பால்ராஜ், சிறுபான்மை அணி வடக்குமாவட்ட பொதுச்செயலாளர் ஜெபக்குமார், முன்னாள் கவுன்சிலர் பிரபு, நிர்வாகி ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் ஜெயம் செல்வராஜ் நன்றி கூறினார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி வடக்கு மாவட்ட சிறுபான்மை அணி பொதுச்செயலாளர் வழக்கறிஞர் எஸ்.பி.வாரியர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கிராமப்புற மற்றும் நகர்புற வளர்ச்சி பிரிவு செயலாளர் மணக்கரை ஏ.முருகன், தூத்துக்குடி மாவட்ட அறிவுஜீவி அணி அமைப்பு செயலாளர் நாட்டாமை எம்.கே.மனோகர் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here