தூத்துக்குடி மாவட்டத்தில் 26,395 மாணவர், மாணவிகளுக்கு இலவச சிம்கார்டு : அமைச்சர் கடம்பூர் செ.ராஜு

0
89
kadambur raju news

கோவில்பட்டி,பிப்.21:

தூத்துக்குடி மாவட்டத்தில் 26,395 மாணவர், மாணவிகளுக்கு இலவச சிம்கார்டு வழங்கப்படுகிறது என்றார் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு.

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கயத்தாறு மற்றும் கோவில்பட்டி வட்டத்துக்கு உள்பட்ட பகுதி மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கயத்தாறு மற்றும் கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கயத்தாறில் 1,449 பயனாளிகளுக்கு ரூ.3கோடியே76லட்சத்து85ஆயிரம் மதிப்பீட்டிலும், கோவில்பட்டியில் 3,391 பயனாளிகளுக்கும் ரூ.6.73 கோடி மதிப்பீட்டிலும் அரசின் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு வழங்கிப் பேசியது: மக்களின் குறைகளை கேட்கும் வகையில் 1100 என்ற இலவச எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எண் அறிவிக்கப்பட்ட 5 தினங்களில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. இக்கோரிக்கைகள் மீது அரசு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறது. உயர்க்கல்வி பயிலும் மாணவர், மாணவிகள் வீடியோ கான்பரன்சிங் மூலம் கல்வி பயிலவும், படிப்பதற்கு தேவையான விவரங்களை இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளவும் தினமும் 2 ஜி.பி. டேட்டா சிம்கார்டு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

அதனடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 27 கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் 19,740 மாணவர், மாணவிகளுக்கும், 11 பொறியியல் கல்லூரிகளில் பயிலும் 3,971 மாணவர், மாணவிகளுக்கும், 10 பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் 2,684 மாணவர், மாணவிகள் என மொத்தம் 26,395 மாணவர், மாணவிகளுக்கு இலவச சிம்கார்டு வழங்கப்படுகிறது என்றார்.முன்னதாக, கயத்தாறு பேரூராட்சியில் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு தெருக்களில் ஃபேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி சத்யா, உறுப்பினர்கள் சந்திரசேகர், தங்கமாரியம்மாள் தமிழ்செல்வன், பிரியா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், கோட்டாட்சியர் சங்கரநாராயணன், வட்டாட்சியர்கள் பாஸ்கரன், மணிகண்டன், நகராட்சி ஆணையர் ராஜாராம், கயத்தாறு பேரூராட்சி செயல் அலுவலர் ஜோதிபாசு, உதவிப் பொறியாளர் அன்னம், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் மல்லிகா, அதிமுக பொதுக்குழு உறுப்பினர் இராமச்சந்திரன், ஒன்றியச் செயலர்கள் வினோபாஜி, அன்புராஜ், அய்யாத்துரைப்பாண்டியன், நகரச் செயலர் விஜயபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here