கோவில்பட்டி,பிப்.23:
கோவில்பட்டி அருகே மூப்பன்பட்டி கிராமத்திற்கு 30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அரசு பேருந்து சேவை தொடங்கப்பட்டிருக்கிறது.
கோவில்பட்டி அருகேயுள்ளது மூப்பன்பட்டி கிராமம். கோவில்பட்டியில் இருந்து ஆவல்நத்தம் செல்லும் அரசு பேருந்து மூப்பன்பட்டி கிராமத்திற்கு சென்று கொண்டு இருந்தது.. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மூப்பன்பட்டி கிராமத்திற்கு சென்ற அரசு பேருந்து திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் கோவில்பட்டி நகருக்கு வருவதற்கு மூப்பன்பட்டி கிராம மக்கள் மிகுந்த சிரமத்துடன் வரவேண்டிய சூழ்நிலை இருந்தது.
எனவே 30 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட அரசு பேருந்து சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று அக்கிராம மக்கள் தொடர்ந்து அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் இன்று முதல் மீண்டும் மூப்பன்பட்டி கிராமத்திற்கு அரசு பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு பின் ஊருக்கு வந்த அரசு பேருந்துக்கு மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அரசு பேருந்தினை இயக்கி வந்த டிரைவர், நடத்துனருக்கு பொது மக்கள் சிறப்பு செய்தனர். தொடர்;ந்து பேருந்து போக்குவரத்தினை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் தொடங்கி வைத்தார்.
30 ஆண்டுகளுக்கு பின் வந்த அரசு பேருந்தில் மக்கள் மகிழ்ச்சியுடன் ஏறி பயணித்தனர். இதில் மூப்பன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் லிங்கேஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர் நிர்மலா அழகர்சாமி, முன்னாள ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் சுப்புராஜ், தேமுதிக மாவட்ட செயலாளர் அழகர்சாமி, காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர் ரமேஷ்மூர்த்தி, ஊர் நாட்டாமை பொன்மாடன், மகாலிங்கம், மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.