எட்டயபுரம் அருகே 6 வயது சிறுவன் மர்ம கொலை – மக்கள் சாலை மறியல்

0
833
crime news

எட்டயபுரம் அருகே உள்ள முத்துலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ஜெய்சங்கர். இவரது மனைவி ரேவதி. இவர்களது மகன் நகுலன்(6). அங்குள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் மாலையில் விளையாடச் சென்ற நகுலன் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிபார்த்தனர். எங்கும் அவன் கிடைக்கவில்லை. இதையடுத்து எட்டயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீஸார் விசாரணை நடத்தி சந்தேகத்தின் பேரில் நேற்று நள்ளிரவு முத்துலாபுரத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் அருள்ராஜை(26) பிடித்து விசாரித்தனர். மது போதையில் இருந்த அருள்ராஜ், நகுலனை கொலை செய்து விட்டதாகவும். ஆனால் அவனது உடல் எங்கு கிடைக்கிறது என்பது தெரியவில்லை என்று கூறியதாகவும் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து சிறுவன் உடலை போலீஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில் சிறுவன் நகுலனின் உடலை உடனே கண்டுபிடித்து தரவேண்டும் என கேட்டு சிறுவனின் உறவினர்கள் தூத்துக்குடி – மதுரை நான்கு வழிச்சாலை எம்.கோட்டூர் விலக்கில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், ஏ.டி.எஸ்.பி.குமார், கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, எட்டயபுரம் தாசில்தார் அழகர். டி.எஸ்.பி. பீர் முகைதீன், எட்டயபுரம் காவல் ஆய்வாளர் கலா மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், சிறுவன் நகுலன் உடலை மீட்டு வந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு மேல் அணிவகுத்து நின்றன.

இதற்கிடையே முத்துலாபுரம் காட்டுப்பகுதியில் தேடிக் கொண்டிருந்த போலீஸார், அப்பகுதி கண்மாய்க்கு அருகில் நகுலன் உடல் தலை வேறு இடத்திலும் உடல் வேறு இடத்திலுமாக கிடப்பதை கண்டுபிடித்தனர். உடலை மீட்ட போலீஸார், அதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் தெரிவித்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். சிறுவனின் உடலை உறவினரிடம் காட்டாமல் போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், உடலை எங்களிடம் காண்பிக்காமல் எப்படி எடுத்துப்போகலாம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராமமக்கள் மீண்டும் நான்குவழிச்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நகுலன் உடல் ஆம்புலன்ஸில் மறியல் நடந்த பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

பின்னர் நகுலன் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பாக அருள்ராஜிடம் எட்டயபுரம் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட அருள்ராஜ் மீது ஏற்கெனவே ஒரு மூதாட்டி கொலை செய்த வழக்கும், திருட்டும் வழக்கும் உள்ளது குறிப்பிடதக்கது. சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here